செய்திகள்
வட்டமலைக்கு வந்த தண்ணீரை விவசாயிகள் மலர்தூவி வரவேற்ற காட்சி.

வட்டமலை அணைக்கு தண்ணீர் திறப்பு-தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி

Published On 2021-11-29 06:37 GMT   |   Update On 2021-11-29 06:37 GMT
கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது அணையின் நீர் வரத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார்.
வெள்ளகோவில்:

வெள்ளக்கோவில் உத்தமபாளையம் வட்டமலை அணைக்கு பரம்பிக்குளம்-ஆழியாறு (பி.ஏ.பி.) வாய்க்காலில் இருந்து தண்ணீர் கிடைக்க  கள்ளிப்பாளையம் ரெகுலேட்டர் திறக்கப்பட்டது. 510 ஏக்கர் பரப்பளவு கொண்ட வட்டமலை அணை கட்டப்பட்டு 41 ஆண்டுகள் ஆகின்றன. இதன் பாசனப் பரப்பு 6,043 ஏக்கர்.

அணையின் மூலம் 30 கிராமங்கள் மற்றும் வெள்ளக்கோவில் நகராட்சி பகுதியை சேர்ந்த மக்கள் பயன்பெறுவார்கள். போதிய நீர்வரத்து இல்லாத இடத்தில் அணை கட்டப்பட்டதால் இதுவரை ஒரு முறை மட்டுமே அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்த அணைக்கு அருகில் செல்லும் அமராவதி ஆற்றில் இருந்தும், பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன வாய்க்காலில் இருந்தும் உபரி நீரை கொண்டு வந்து நிரப்ப வேண்டுமென விவசாயிகள், தன்னார்வலர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த  சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது  அணையின் நீர் வரத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். இதையடுத்து, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முயற்சியின் காரணமாக பொங்கலூர் அருகிலுள்ள கள்ளிப்பாளையம் பி.ஏ.பி. ரெகுலேட்டரில் இருந்து அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

அங்கிருந்து 35 கி.மீ. தூர ஓடை மற்றும் அதிலுள்ள சிறு, சிறு தடுப்பணைகளைக் கடந்து வட்டமலை அணைக்கு தண்ணீர் கிடைக்க உள்ளது. தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் பி.ஏ.பி., தொகுப்பு அணைகள் நிரம்பியுள்ளதால் வறண்டு கிடக்கும் வட்டமலை அணைக்கு போதுமான தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது.

இதையடுத்து தமிழக அரசுக்கும், அதிகாரிகளுக்கும் வட்டமலை அணைப்பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News