செய்திகள்
ஜே.பி.நட்டா

பா.ஜ.க., அலுவலக புதிய கட்டிடங்கள் திறப்பு விழாவில் பங்கேற்க ஜே.பி.நட்டா நாளை திருப்பூர் வருகை-பலத்த போலீஸ் பாதுகாப்பு

Published On 2021-11-23 10:40 GMT   |   Update On 2021-11-23 10:52 GMT
டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை மதியம் 12.15 மணிக்கு ஜே.பி.நட்டா கோவை வருகிறார்.
திருப்பூர்:

தமிழகத்தில் பா.ஜ.க.வை பலப்படுத்தும் பணியில் தேசிய தலைமை தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக அனைத்து  மாவட்டங்களிலும் பா.ஜ.க.வுக்கு  மாவட்ட கட்சி அலுவலகங்கள் கட்டப்பட உள்ளன. முதல் கட்டமாக 17 மாவட்டங்களில் மாவட்ட அலுவலகம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.  

திருப்பூர், ,ஈரோடு, நெல்லை, திருப்பத்தூரில் கட்டிட பணிகள் முடிந்து திறப்பு விழாவுக்கு தயாராகி உள்ளன. அந்த கட்டிடங்களை திருப்பூரில் நாளை 24 -ந் தேதி (புதன்கிழமை) நடைபெறும் நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா திறந்து வைக்கிறார்.  

இதற்காக அவர் டெல்லி யில் இருந்து விமானம் மூலம் நாளை மதியம் 12.15 மணிக்கு கோவை வருகிறார். அங்கிருந்து கார் மூலம்  திருப்பூர் வருகிறார். பல்லடத்தில் 12.45 மணியளவில் ஜே.பி. நட்டாவுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.  

அதன்பிறகு 2.30 மணிக்கு திருப்பூர்  வீரபாண்டி பல்லடம் மெயின்ரோட்டில் உள்ள லட்சுமி திருமண மண்டபத்தில் மாநில செயற்குழு கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மற்றும் மூத்த நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். 

கூட்டத்தில் ஜே.பி.நட்டா பங்கேற்று, தமிழகத்தில் பா.ஜ.க.வை பலப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்டவை தொடர்பாக பா.ஜ.க. வினருக்கு ஆலோசனைகள் வழங்க உள்ளார். 

இதையடுத்து மாலை 4 மணிக்கு திருப்பூர் பல்லடம் மெயின்ரோடு வித்தியாலயம், செல்வலட்சுமி நகரில் புதிதாக கட்டப்பட்ட திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க.  தலைமை அலுவலகத்தை ஜே.பி.நட்டா திறந்து வைக்கிறார். 

அங்கிருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் நெல்லை, திருப்பத்தூர், ஈரோட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட அலுவலகங்களை திறந்து வைக்கிறார்.    
பின்னர் புதிய மாவட்ட அலுவலகம் பின்புறம் உள்ள மைதானத்தில் பொதுக் கூட்டம் நடக்கிறது. 

இதில் ஜே.பி.நட்டா பங்கேற்று பேசுகிறார். பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வருகையையொட்டி திருப்பூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. மேலும் விழாவுக்கான மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News