ஆன்மிகம்
பாலைவனநாதர், தவள வெண்ணகை அம்பாள்

ராமபிரான் வழிபட்ட திருப்பாலைத்துறை பாலைவனநாதர்

Published On 2021-02-01 01:22 GMT   |   Update On 2021-02-01 01:22 GMT
காவிரி தென்கரை தலங்கள் வரிசையில் 19-வது தலமாக வைத்து எண்ணப்பெறுவது திருப்பாலைத்துறை திருத்தலமாகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று, கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று நமது முன்னோர்கள் அருளிச்சென்றுள்ள அறிவுரைகள், கோவில்களின் முக்கியத்துவத்தையும், கோவில்களுக்கு நாள்தோறும் சென்று நாம் வணங்க வேண்டியதன் சிறப்பையும் எடுத்து விளக்குவதாக உள்ளன.

வான் பொய்ப்பினும் தான் பொய்யா காவிரி நதி பாய்ந்து பொன்வளங்கொழிக்கும் திருநாடு சோழவள நாடாகும். இந்த சோழவள நாட்டின் சிறப்பு தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே மண்ணாவதும் சோழ மண்டலமே எனும் தனிப்பாடல் ஒன்றில் சிறப்பாக பேசப்பெற்றுள்ளது.

சோழ மண்டலத்தில், தேவார பாடல் பெற்ற 276 தலங்களுள் 190 தலங்கள் அமைந்துள்ளன. இவையனைத்தும் காவிரி நதியை மையமாக கொண்டு தில்லை எனப்பெறும் கோவில் பதியை முதன்மையாக கொண்டு காவிரி வடகரை தலங்கள் எனவும், காவிரி தென்கரை தலங்கள் எனவும் எடுத்து உரைக்கப்பெற்றுள்ளன.

காவிரி தென்கரை தலங்கள் வரிசையில் 19-வது தலமாக வைத்து எண்ணப்பெறுவது திருப்பாலைத்துறை திருத்தலமாகும். தஞ்சை-கும்பகோணம் சாலையில் பாபநாசத்திற்கு முன்பாக திருப்பாலைத்துறையில் அமைந்துள்ள இக்கோவில் சப்தஸ்தான திருத்தலங்களில் ஒன்றாகும். இத்தலத்து இறைவனின் பெயர் பாலைவனநாதர், இறைவியின் பெயர் தவளவெண்ணகையாள்.

தல வரலாறு

இத்தல வரலாறு பல்வேறு விதமாக கூறப்படுகிறது. அவற்றை இங்கே பார்ப்போம்.

முற்காலத்தில் பாலைச்செடிகள் அடர்ந்து காணப்பட்டதால் பாலைவனம் என அழைக்கப்பட்டது. கல்வி, வேள்விகளில் சிறந்து விளங்கிய தாருகாவனத்து முனிவர்கள் இறைவனையே வெறுத்து அவரை அழிப்பதற்காக து‌‌ஷ்டவேள்வி நடத்தி யாகத்தில் இருந்து கொடிய புலியை வரவழைத்து இறைவன் மீது ஏவினர். இறைவன், அந்த புலியை கொன்று அதன் தோலை ஆடையாக உடுத்திக்கொண்டதாக தல வரலாறு தெரிவிக்கிறது.

சிவபெருமானது பற்றற்ற நிலையை கலைத்து பார்வதியை மணம்புரிந்து கொள்ளும்படி செய்ய மன்மதன், பூ அம்புகளை எய்தபோது தழல் விழியால் நோக்கி அவனை சாம்பலாக்கினார். பின்னர் தேவர்கள் வேண்டுகோளுக்கு இரங்கி அவனை உருவில்லாதவனாக்கி பார்வதியை மணம் புரிந்து கொண்டார். காமன் எரிந்த சாம்பல் முட்டாயிருந்ததை அங்கு சென்ற பிள்ளையார் கண்டு அதில் இருந்து ஒரு உரு அமைத்து உயிர் உண்டாக்கினார். அவனே பண்டாசுரனாகி தேவர்களை எதிர்த்து துன்புறுத்தினான்.

அவர்கள் மேருமலைக்கு சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர் பார்வதியிடம் தெரிவிக்குமாறு கூறினார். அதன்படி அவர்கள் தேவியிடம் தெரிவித்தனர். அம்மையார் கூறியபடி தேவர்கள் இந்த இடத்திற்கு வந்து ஒரு பெருவேள்வி செய்தனர். அப்போது அம்மையார் திரிபுரை என்ற உருவத்துடன் நான்கு கைகளிலும் கரும்பு வில், பூவாளி, அங்குசம், மலர்மாலை தாங்கி காட்சி கொடுத்து கரும்புவில்லை வளைத்து, மலர் அம்பினால் எய்து பண்டாசுரனை கொன்றாள். அந்த வேள்வி குண்டத்தின் வெப்பம் எவராலும் தாங்க முடியாதிருந்ததால் அம்மையாரின் ஆணைப்படி சிவபெருமானை வேண்ட அவர் வீரபத்திர உருவத்துடன் தமது தலையில் இருந்த கங்கையை அக்குண்டத்தில் விட, அது குளிர்ந்து ஒரு திருக்குளமாயிற்று. இங்கு பல முனிவர்கள் வசித்ததால் இதற்கு பிரம்ம வனம் என்னும் பெயர் உண்டாயிற்று.

ராமபிரான் பூஜித்த தலம்

மலயத்துவச பாண்டியன் தாமிரபரணியில் நீராடி அதன் அருகில் இருந்த காலவ முனிவரின் குடிலின் அருகில் சென்றான். அங்கிருந்து காலவ முனிவர் அவனை வரவேற்று பல நல் உபதேசங்களை கூறினார். அவரது உபதேசத்தை அவன் தனது ஊழ்வினையால் செவிமடுக்காது அரசர்கள்தான் பெரியவர் என கூறினான். அதனால் வெகுண்ட முனிவர், அவனை கரடியாகுமாறு சபிக்க அவனும் அவ்வுருவை பெற்று வனமெங்கும் திரியலானான். அவன் மனைவி பத்மாவதி மன்னிப்பு கேட்டுக்கொண்டதற்கிணங்கி அவர் மனமிரங்கி அகத்திய முனிவரை வழிபட சொன்னார்.

அதன்படி அகத்திய முனிவர் இரக்கமுற்று திருப்பாலைத்துறையை சுற்றியுள்ள வனத்திற்கு செல்லும்படி அருளினார். அதன்படி அவனும் இத்தலத்திற்கு வந்து பாலைவனநாதரை வழிபட்டபோது கரடி உருவம் மறைந்து சுயஉருவம் கிடைத்தது. சுவாமியின் பெருமையை உணர்ந்த மன்னன், கோவிலில் திருமண மண்டபம் கட்டினார். அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடத்தி வைத்தான். அதனால்தான் அம்பாள், இக்கோவிலில் கல்யாண கோலத்தில் காட்சியளிப்பதாக தல வரலாறு தெரிவிக்கிறது. இந்த கோவிலில் நடைபெறும் அனைத்து திருமணங்களும் சிறப்பு பெறுகின்றன.

மகாவி‌‌ஷ்ணு, பிரம்மன், வசி‌‌ஷ்டர், தவுமியர், அர்ச்சுணர் ஆகியோர் வழிபட்ட தலம் இது. கலியுகத்தில் ராமபிரான், இக்கோவிலுக்கு வந்து இத்தலத்து இறைவனை பூஜித்து சென்றதாகவும் வரலாறு தெரிவிக்கிறது.

அன்னப்பாத்திரம்

ஐந்து நிலை ராஜகோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் பலிபீடம், நந்தி ஆகியவை உள்ளது. ராஜகோபுரத்தின் வலதுபுறம் விநாயகரும், இடதுபுறம் முருகனும் உள்ளனர். கோவிலின் வலதுபுறம் அம்மன் சன்னதி அமைந்து உள்ளது. திருமண கோல தலங்களாக கருதி போற்றப்படும் சோழநாட்டு தலங்களில் இந்த தலமும் ஒன்றாக கருதப்பெறுகிறது.

மேலும் இத்திருக்கோவிலில் அம்பாளின் இடத்திருக்கரத்தில் அன்னப்பாத்திரம் உள்ளதால் அம்பாளை வழிபடுவோர்க்கு எக்காலமும் அன்னத்திற்கு குறைவிருக்காது என்று கூறப்படுகிறது.

கோவிலை சுற்றிலும் அ‌‌ஷ்டதிக்கு பாலகர்கள் நீராடி வழிபட்ட 8 தீர்த்தங்களும், 8 லிங்கங்களும் இருந்தனவாய்க் கூறப்பெறினும், தற்போது வசிட்ட தீர்த்தம், இந்திர தீர்த்தம் உள்பட 3 தீர்த்தங்கள் மட்டுமே உள்ளன.

வருகிற 1-ந் தேதி குடமுழுக்கு விழா

இக்கோவிலில் குடமுழுக்கு விழா வருகிற 1-ந் தேதி(திங்கட்கிழமை) நடக்கிறது. குடமுழுக்கு விழாவையொட்டி யாகசாலை பூஜை நிகழ்ச்சிகள் வருகிற 30-ந் தேதி(சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், தன பூஜை, லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன் தொடங்குகிறது. அன்று மாலை முதல் கால யாக பூஜையும், மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) காலையில் 2-ம் கால யாக பூஜையும், மாலையில் 3-ம் கால யாக பூஜையும் நடக்கிறது. 1-ந் தேதி(திங்கட்கிழமை) காலை 4-ம் கால யாக பூஜையும், அன்று காலை 9.45 மணிக்கு குடமுழுக்கு விழாவும் நடக்கிறது. அன்று மாலையில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.

குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை தஞ்சை இணை ஆணையர் தென்னரசு, உதவி ஆணையர் சிவராம்குமார் ஆகியோர் வழிகாட்டுதலின்படி கோவில் செயல் அலுவலர் ஹாசினி, தக்கார் குணசுந்தரி, கோவில் எழுத்தர் சங்கர மூர்த்தி, ஆன்மிக பேரவை அமைப்பாளர் சீனிவாசன் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News