செய்திகள்
கோப்புபடம்

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - யாருக்கெல்லாம் 'இ-பதிவு' அவசியம்

Published On 2021-06-11 17:04 GMT   |   Update On 2021-06-11 17:04 GMT
ஊரடங்கின் போது, அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு ஜூன் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் போது, அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்த் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்திருந்தாலும், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் பிளம்பர் உட்பட சுய தொழில் புரிபவர்களுக்கு 'இ-பதிவு' கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.மின் பணியாளர், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இ-பதிவுடன் அனுமதிக்கப்படுவர், எனினும் இவ்வகைக் கடைகள் திறக்க அனுமதியில்லை.


வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும். மேலும், வாடகை டேக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படும்.



இதர 27 மாவட்டங்களில் இவர்களுக்கு 'இ-பதிவு' கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் நான்கு சக்கர வாகனங்களில் பணிக்கு செல்ல ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்தனர். தற்போது அவர்கள் தங்களது இரு சக்கர வாகனங்களிலும் இ-பதிவு மற்றும் தொழிற்சாலை வழங்கியுள்ள அடையாள அட்டையுடன் பணிக்கு சென்று வர அனுமதிக்கப்படுவர்.
Tags:    

Similar News