செய்திகள்

மத்திய, மாநில அரசுகள் விரைவில் அகற்றப்படும்- வைகோ பேச்சு

Published On 2019-05-12 10:58 GMT   |   Update On 2019-05-12 10:58 GMT
மத்திய பாரதீய ஜனதா அரசும், மாநில அ.தி.மு.க. அரசும் விரைவில் அகற்றப்படும் என்று சூலூரில் வைகோ பேசியுள்ளார்.

சூலூர்:

சூலூர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து சூலூர் சீரணி அரங்கில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ பேசியதாவது-

மத்திய பாரதீய ஜனதா அரசும், மாநில அ.தி.மு.க. அரசும் விரைவில் அகற்றப்படும். தேர்தல் ஆணையம் நடு நிலைமை தவறிவிட்டதாக முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி குற்றம் சாட்டியுள்ளார். மோடி ஓட்டு வாங்குவதற்காக ராணுவத்தை பயன்படுத்துகிறார்.

தமிழகத்தில் கஜா புயலின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மோடி வரவில்லை. பாரதீய ஜனதா மக்களிடையே பேதங்களை ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட மத்திய அரசுக்கு அடிமையாக செயல்படுகிறது தமிழக அரசு.

கொங்கு மண்டலத்தில் உயர் மின் கோபுரங்களை அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கிறது. கெயில் எண்ணை நிறுவன குழாய்கள் விளை நிலங்கள் வழியாக பதிக்கப்படுகின்றன.

இடைமலை ஆறு திட்டத்தை நடைமுறைப்படுத்த கேரள அரசுடன் பேசினேன். ஆனைமலை - நல்லாறு திட்டத்தை இன்னும் செயல்படுத்தாமல் தற்போதைய அரசு தாமதப்படுத்துகிறது.

மீத்தேன் திட்டத்தால் காவிரி படுகை சிதைக்கப்படுகிறது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தமிழக மக்கள் மறக்கவில்லை.

முல்லை பெரியாறு அணையை உடைக்கவும், அங்கு புதிய அணை கட்டவும் தமிழகத்துக்கு விரோதமாக கேரளத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

தமிழகத்தில் வேலை இல்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. புதிய தொழிற்சாலைகள் இங்கு வர முடியவில்லை. இதற்கு காரணம் எடப்பாடி அரசின் கமி‌ஷன் அணுகுமுறையால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் மற்ற மாநிலங்களுக்கு சென்று விட்டன. நீட் தேர்வு எழுத போன மாணவர்களை மனிதாபிமானத்துடனா நடத்தினார்கள்?

இத்தனை கொடுமைக்கும் காரணமான எடப்பாடி அரசை அப்புறப்படுத்த வேண்டிய பொறுப்பு வாக்காளர்களாகிய உங்களுக்கு உள்ளது.


நீட் தேர்வை கொண்டு வரும் நரேந்திர மோடியை தமிழகத்துக்குள் வர கூடாது என்று கூறும் தைரியம் எடப்பாடிக்கு உண்டா? ஆனால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார். 

Tags:    

Similar News