செய்திகள்
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்ததால் 2 நாட்களுக்கு ஒரு முறை சோதனை

Published On 2020-09-20 09:03 GMT   |   Update On 2020-09-20 09:03 GMT
சென்னையில் வீடு வீடாக சென்று தினமும் காய்ச்சல் பரிசோதனை செய்வது நிறுத்தப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்ததால் 2 நாட்களுக்கு ஒரு முறை மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.
சென்னை:

சென்னை மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்த காய்ச்சல் முகாம்களால் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட குடிசை பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் வீடு வீடாக சென்று தினமும் காய்ச்சல் பரிசோதனைகளை செய்து வந்தனர்.

ஒவ்வொரு நாளும் 100-ல் இருந்து 150 வீடுகள் வரையில் சுகாதாரத்துறை அதிகாரிகள், தன்னார்வலர்களோடு சேர்ந்து இந்த பரிசோதனையை செய்து வந்தனர். தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளதால் 2 நாட்களுக்கு ஒரு முறை சென்று வீடு வீடாக சோதனை செய்து வருகிறார்கள்.

குடிசை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட காய்ச்சல் முகாம்கள் நல்ல பலனை அளித்துள்ளதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 124 நாட்களுக்கும் மேலாக மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ச்சியாக இந்த பரிசோதனையை நடத்தி உள்ளனர்.

இது தொடர்பாக மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் கூறும்போது, குடிசைப் பகுதிகளில் காய்ச்சல் மற்றும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக கூறினார்கள்.

இருப்பினும் காய்ச்சல் முகாம்கள் மூலம் குடிசை பகுதிகளிலும் மற்ற இடங்களிலும் 100 வீடுகள் கணக்கெடுத்து காய்ச்சல் பரிசோதனை அவ்வப்போது மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இன்று குடிசை பகுதியில் 100 வீடுகளை கணக்கெடுத்தால், நாளை மற்ற இடங்களில் 100 வீடுகளை கணக்கெடுத்து காய்ச்சல் பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 30 ஆயிரத்து 908 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் சென்னையில் 1 லட்சத்து 53,616 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் 4 லட்சத்து 75,717 பேர் குணம் அடைந்துள்ளனர். சென்னையில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 633 பேர் குணம் அடைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் 46 ஆயிரத்து 506 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சென்னையில் 9946 பேர் முகாம்களில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 8685 பேரை கொரோனா பலி வாங்கி இருக்கும் நிலையில், சென்னையில் 3037 பேர் உயிரிழந்துள்ளனர்.
Tags:    

Similar News