ஆன்மிகம்
முளகுமூடு தூய மரியன்னை ஆலயம்

177 ஆண்டுகள் பழமையான முளகுமூடு தூய மரியன்னை ஆலயம்

Published On 2021-09-17 06:02 GMT   |   Update On 2021-09-17 06:02 GMT
இங்கு பல அற்புதங்களும், அருள் அடையாளங்களும் மக்களுக்கு கிடைக்கிறது. இப்போது ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும் அற்புதம் நிகழ்த்தும் சிறப்பு ஜெப வழிபாடுகள் காலை 10.30 மணி முதல் நடைபெறுகிறது.
குழித்துறை மறைமாவட்டத்தில் அமைந்துள்ள முளகுமூடு தூய மரியன்னை ஆலயம் முன்பு கோட்டார் மறை மாவட்டத்தின் கீழும், அதற்கு முன்னதாக கொல்லம் மறை மாவட்டத்தின் கீழும் இருந்தது. இது பழமையும், பாரம்பரியமும் மிக்க கார்மல் மறைபரப்புப்பணி மையங்களுள் ஒன்று.

1847-ம் ஆண்டிற்கு முன்பே முளகுமூடு பகுதியில் கத்தோலிக்க கிறிஸ்தவ சமூகமும், ஆலயமும் இருந்துள்ளது என்று இயேசு சபையினரின் மறைப்பணி செயல்பாட்டு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழலில் 1860-ல் மறைப்பணியாற்ற கார்மல் சபை துறவியாக இந்தியா வந்த அருட்தந்தை விக்டர் வெல்யுர் பங்குதந்தையாக நியமிக்கப்பட்டு முளகுமூடு பங்கு உருவாக்கப்பட்டது. 19-ம் நூற்றாண்டில், குறிப்பாக பங்கு நிறுவப்பட்டு 1860-ம் ஆண்டளவில், முளகுமூடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நிகழ்ந்த கொடுமைகளை, ஒடுக்கு முறைகளை கடுமையாக எதிர்த்து போராடினார் அருட்தந்தை விக்டர். அதோடு நில்லாமல் மக்கள் ஓட்டுக்கூரை வீடுகளை கட்ட வலியுறுத்தியதோடு, ஓட்டு தொழிற்சாலை ஒன்றையும் முளகுமூட்டில் நிறுவினார்.

ஓட்டுத்தொழிற்சாலை மூலம் பெறப்பட்ட வருமானத்தை ஆதரவற்ற அனாதை குழந்தைகளின் வாழ்வுக்காக செலவிட்டார். அந்த வகையில் ஏறத்தாழ ஆயிரம் ஆதரவற்றோரை பேணி பாதுகாத்து வந்தார். அந்த ஓட்டு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஓடுகளை பத்மநாபபுரத்திலுள்ள திருவிதாங்கூர் அரண்மனை கூரைகளில் இன்றும் நாம் காணலாம்.

அருட்தந்தை விக்டர், வாழ்வு குறித்து அருட்பணியாளர் ஆன்ட்ரு, 1923-ம் ஆண்டு ‘அருட்தந்தை விக்டர் தென்னிந்தியாவின் அப்போஸ்தலர்’ என்ற பெயரில் புத்தகம் எழுதி வரலாற்று பதிவு செய்துள்ளார்.

150-ம் ஆண்டு ஜூபிலி

முளகுமூடு பங்கு பழைய ஆலயமானது, 1910-ம் ஆண்டு செப்டம்பர் 8-ந் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது. மீண்டும் 1981-ம் ஆண்டு செப்டம்பர் 4-ந் தேதி கான்கிரீட் கூரையாக மாற்றப்பட்டது. மீண்டும் பங்கின் 150-ம் ஆண்டு ஜூபிலியை தொடர்ந்து 5-9-2014 அன்று புதுபொலிவுடன் புதுப்பிக்கப்பட்டது.

இத்தகைய சிறப்புமிக்க தூய மரியன்னை ஆலய பீடத்தின் இருபுறமும் முறையே 300 ஆண்டு பழமையான, பெல்ஜியத்திலிருந்து கொண்டுவரப்பட்ட அன்னை மரியின் திருஉருவ வரைபடமும், நமது மறைமாவட்ட பாதுகாவலர் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளையின் அங்கீகரிக்கப்பட்ட முதல் வரை படமும் பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு பல அற்புதங்களும், அருள் அடையாளங்களும் மக்களுக்கு கிடைக்கிறது. இப்போது ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும் அற்புதம் நிகழ்த்தும் சிறப்பு ஜெப வழிபாடுகள் காலை 10.30 மணி முதல் நடைபெறுகிறது.

பசிலிக்காவாக...

14-1-2016 அன்று போப் ஆண்டவரின் சிறப்புத்தூதர் முளகுமூடு தூய மரியன்னை ஆலயத்துக்கு வந்த போது இங்கு நம்பிக்கை ஆழமாய் வேரூன்றியுள்ளதாக பாராட்டினார். தொடர்ந்து முளகுமூடு பங்குத்தந்தை அருட்பணியாளர் டொமினிக் கடாட்ச தாஸ், முளகுமூடு பங்கை பசிலிக்காவாக அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இது குழித்துறை மறைமாவட்டத்தின் முதல் ஆயர் ஜெரோம் தாஸ் வறுவேலால் ஏற்கப்பட்டது.

மறைமாவட்ட ஆயர் அதனை சிறப்பு வேண்டுகோளாக மதுரை பேராயர், தமிழ்நாடு ஆயர் பேரவைத்தலைவர், இந்திய ஆயர் பேரவை தலைவர் ஆகியோருக்கு அனுப்பி, அதற்கான தடையில்லா சான்றினை கோரினார். அதன்படி அவர்களால் அச்சான்று போப் ஆண்டவரின் தூதரிடம் வழங்கப்பட்டு, ரோம் நகரில் போப் ஆண்டவர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.

இறுதியாக வத்திக்கானிலிருந்து ஜூன் 9-ந் தேதி முளகுமூடு தூய மரியன்னை ஆலயம், மைனர் பசிலிக்காவாக உயர்த்தி ஆணை வழங்கப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க இவ்வாணையால் நமது தூய மரியன்னை பசிலிக்கா, தமிழகத்தின் 7-வது பசிலிக்காவாக உயர்த்தப்பட்டுள்ளது.

அன்னையின் அருள் நிறைந்த முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா, பங்கு மக்களின் நம்பிக்கைக்கு உயிரூட்டும் தலமாக மட்டுமல்லாது, அன்னையின் அருளாசிகளை வேண்டும் அனைத்து மக்களுக்கான திருப்பயண ஆன்மிக தலம் ஆகட்டும்.

முளகுமூடு தூய மரியன்னை ஆலயமானது 9-6-2020 அன்று போப் ஆண்டவரால் தமிழகத்தின் 7-வது பசிலிக்காவாக உயர்த்தப்பட்டது.

பேரருட்தந்தை டொமினிக் எம்.கடாட்ச தாஸ், தூய மரியன்னை பசிலிக்கா அதிபர்,

முளகுமூடு.
Tags:    

Similar News