செய்திகள்
‘ட்ரோன்’ எந்திரம் மூலம் விவசாய பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் காட்சி.

தொப்பம்பட்டி பகுதியில் ‘ட்ரோன்’ மூலம் மருந்து தெளித்து அசத்தும் விவசாயிகள்

Published On 2021-04-29 09:30 GMT   |   Update On 2021-04-29 09:30 GMT
நாமக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி பகுதியில் பயிர்களுக்கு மருந்து தெளிக்க 'ட்ரோன்' பயன்படுத்தி வருவது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

நாமகிரிபேட்டை:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர் பகுதிகளில் மரவள்ளி கிழங்கு, பருத்தி, சின்ன வெங்காயம், நிலக்கடலை போன்றவை அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.

குறிப்பாக, நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் தொப்பப்பட்டி, ஜேடர்பாளையம், அரியாகவுண்டம்பட்டி, பச்சுடையாம்பாளையம், சீராப்பள்ளி, வெள்ளாளப்பட்டி, ஒடுவன்குறிச்சி, குள்ளாண்டிக்காடு, ஈச்சம்பட்டி, வேலம்பாளையம் போன்ற பகுதிகளில் மட்டும் மரவள்ளி பயிர் மானாவாரியில் சுமார் 6 ஆயிரம் ஹெக்டர் பரப்பிலும் பருத்தி, நிலக்கடலை, தானிய வகைகள், காய்கறிகள் போன்றவை கணிசமான அளவிலும் பயிரிடப்பட்டு வருகின்றன.

ஆண்டுதோறும் மரவள்ளி, பருத்தி, காய்கறிகள் போன்றவை பயிரிடப்படும்போது, பூச்சிகள் அதிக அளவில் தாக்குதல் இருப்பது வழக்கமாக நடக்கும் ஒன்று.

இப்பகுதியில், மரவள்ளி பயிரில் பேன் பூச்சி, மாவுப்பூச்சி இருப்பதால், நாமகிரிப்பேட்டை வட்டார விவசாயிகள் பூச்சிகளை கட்டுப்படுத்த தொடர்ந்து பூச்சி கொல்லி மருந்துகள் தெளிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சின்னமணலி வல்வில் ஒரி சுதேசி உழவர்கள் உற்பத்தியாளர்கள் நிறுவனம் சார்பில், ட்ரோன்களை பயன்படுத்தி மருந்து தெளிக்கும் எந்திரம் பயன்படுத்தும் நவீன தொழில்நுட்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முதன்முறையாக ட்ரோன்கள் மூலம் மருந்து தெளிப்பு விவசாயிகளிடம் வரவேற்பினை பெற்றுள்ளது. தொப்பப்பட்டி பகுதியில் குமார், கணேசன் ஆகியோரது தோட்டத்தில் இதற்கான செயல்முறை விளக்கம் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது. இந்த, ட்ரோன்களை வயல்வெளிகளில் பயன்படுத்துவதால், நேரம், ஆள் கூலி மிச்சமாகும் என வேளாண் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் முதுகில் வைத்து மருந்து தெளிப்பதால் உயரமாக உள்ள செடிகளுக்கு முழுமையாக தெளிக்க முடியாது. நவீன, ட்ரோன் எந்திரம் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. அதனால், ட்ரோன் உயர பறந்து மருந்து தெளிப்பதால், முழுமையான பயன் கிடைப்பதாகவும் இந்த எந்திரத்தில் ஒரு முறை 10 லிட்டர், 15 லிட்டர் கேனில் மருந்து நிரப்பி தெளிக்கப்படுகிறது. இதற்காக மணிக்கு 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

Tags:    

Similar News