செய்திகள்
மொடக்குறிச்சி தொகுதி

திமுக- பா.ஜனதா நேருக்குநேர் மோதும் மொடக்குறிச்சி தொகுதி கண்ணோட்டம்

Published On 2021-03-15 12:50 GMT   |   Update On 2021-03-15 12:50 GMT
அதிமுக கூட்டணியில் பா.ஜனதா சார்பில் சி.கே. சரஸ்வதியும், திமுக சார்பில் சுப்புலட்சுமி ஜெகதீசனும் மோதும் மொடக்குறிச்சி தொகுதி கண்ணோட்டம்.
மொடக்குறிச்சி தொகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக விளங்கி வருகிறது. காலிங்கராயன், கீழ்பவானி வாய்க்கால்கள் மூலம் பாசன வசதி பெறும் இந்த தொகுதியில் மஞ்சள், மரவள்ளி கிழங்கு, நெல் ஆகியவை அதிகளவில் பயிரிடப்படுகிறது.

புகழ்பெற்ற கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் இந்த தொகுதியில்தான் அமைந்து உள்ளது.

மொடக்குறிச்சி தொகுதியில் புஞ்சை லக்காபுரம், புதூர், துய்யம்பூந்துறை, கனகபுரம், வேலம்பாளையம், பூந்துறை, சேமூர், அவல்பூந்துறை, மொடவாண்டி, சத்தியமங்கலம், நஞ்சை ஊத்துக்குளி, கண்ணுடையாம் பாளையம் புதூர், முத்தாயி பாளையம், ஈஞ்சம்பள்ளி,தானத்தம் பாளையம்,



எழுமாத்தூர், வேலம்பாளையம், முகாமி அனுமன்பள்ளி, அட்டவணை அனுமன்பள்ளி, காகம், குலவிளக்கு, பழமங்கலம், நஞ்சை கொளாநல்லி, கொளத்துபாளையம், கொந்தளம்,எல்லைக்காடு விளக்கேத்தி, கொங்குடையம் பாளையம், முருங்கியம் பாளையம், அஞ்சூர், வள்ளிபுரம், இச்சிபாளையம்,வடிவுள்ள மங்கலம், அய்யம் பாளையம்,எழுநுத்து மங்கலம்,தேவகி அம்மாபுரம், ஆவுடையாபாறை மற்றும் நாகமநாயக்கன் பாளையம் ஆகிய கிராமங்களும்,

அவல்பூந்துறை, மொடக்குறிச்சி, பாசூர், அரச்சலூர், வடுகப்பட்டி, கிளாம்பட்டி,வெள்ளோட்டம்பரப்பு, சிவகிரி, கந்தசாமி பாளையம், ஊஞ்சலூர், வெங்கம்பூர், கொடுமுடி மற்றும் சென்னசமுத்திரம் ஆகிய பேரூராட்சிகளும் உள்ளன.



இங்கு ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 13 ஆயிரத்து 952 பேர் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 23 ஆயிரத்து 493 பேர் உள்ளனர். இதர வாக்காளர்கள் 12 பேர் என மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 457 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த தொகுதியில் இதுவரை நடந்த தேர்தலில் அ.தி.மு.க. 7 முறையும், தி.மு.க. 3 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும், சங்கத சோசலிச கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த தொகுதியில் கொங்கு வேளாள கவுண்டர்கள், வேட்டுவ கவுண்டர்கள், நாடார்கள், வன்னியர்கள், ஆதிதிராவிடர் உள்பட பல்வேறு சமூகத்தினர் கணிசமாக வசித்து வருகிறார்கள்.

மொடக்குறிச்சி தொகுதியில் கடந்த 1996-ம் ஆண்டு தேர்தலில் தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தங்கள் தேவை, விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டும் என்று வலியுறுத்தி இந்த தொகுதியில் 1033 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்காக 120 பக்கம் கொண்ட வாக்குச்சீட்டு புத்தகம் அச்சிடப்பட்டது.



இத்தேர்தலில் பழனிச்சாமி என்ற பெயரில் 60 பேரும், ராமசாமி என்ற பெயரில் 30 பேரும், கந்தசாமி என்ற பெயரில் 28 பேரும், சுப்பிரமணியம் என்ற பெயரில் 27 பேரும், சின்னசாமி என்ற பெயரில் 26 பேரும், முத்துசாமி என்ற பெயரில் 14 பேரும் போட்டியிட்டனர்.

இதில் பழனிச்சாமி என்ற பெயரில் போட்டியிட்டவர்களில் 44 பேரும், ராமசாமி என்ற பெயரில் போட்டியிட்டவர்களில் 19 பேரும் ஒரு ஓட்டு கூட வாங்கவில்லை. இத்தொகுதியில் போட்டியிட்ட 1033 பேரில் 4 பேர் மட்டுமே 20 ஆயிரம் ஓட்டுகளுக்கு மேல் பெற்றனர். 4 சுயேச்சைகளுக்கு மட்டுமே 100 ஓட்டுக்கு மேல் கிடைத்தது. ஆயிரத்து 30 சுயேச்சை வேட்பாளர்களும் சேர்ந்து வாங்கிய ஓட்டு 7 ஆயிரத்து 480 தான்.

ஒரு ஓட்டு கூட வாங்காதவர்கள் 88 பேர். ஒரு ஓட்டு மட்டும் வாங்கியவர்கள் 97 பேர், இரண்டு ஓட்டு வாங்கியவர்கள் 157 பேர், மூன்று ஓட்டு வாங்கியவர்கள் 108 பேர், நான்கு ஓட்டு வாங்கியவர்கள் 84 பேர், ஐந்து ஓட்டு வாங்கியவர்கள் 60 பேர். மீதி அனைவரும் 10 ஓட்டுக்கு மேல் வாங்கியவர்கள்.

மேலும் இத்தொகுதியில் அப்போது 28 பெண்களும் போட்டியிட்டனர். இதில் 16 பேருக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை. இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் வெற்றி பெற்றார். இந்த தேர்தல் இந்திய அளவில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.



விவசாயம் மட்டுமே நம்பி உள்ள இந்த தொகுதியில் நிரந்தர நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. தற்காலிக கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் நெல் கொட்டும் போது மழை காலங்களில் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை விடுத்து உள்ளனர். இதே போல் கீழ்பவானி பாசன பகுதியில் மஞ்சள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. 

கோரிக்கைகள்

மஞ்சள் மார்க்கெட் ஈரோடு பகுதியில்தான் உள்ளது. இதனால் கொடுமுடி பகுதியில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரம் மஞ்சள் எடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மொடக்குறிச்சி தொகுதியில் பல விவசாய கூட்டுறவு சங்கங்கள் இருந்தாலும், மஞ்சள் இருப்பு வைக்கும் கிடங்கு வசதி இல்லாதது பெரும் குறையாக உள்ளது. எனவே இந்த பகுதியில் மஞ்சள் கிடங்கு வசதி ஏற்படுத்தி மஞ்சள் மூலம் மதிப்பு கூட்டுப்பொருள் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மஞ்சள் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

காலிங்கராயன் வாய்க்காலில் சாயநீர் கலப்பதை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதேபோல் இந்த தொகுதியில் சமுதாய கூடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. மொடக்குறிச்சி பகுதியில் போதுமான நீர்த்தேக்க தொட்டி இல்லாததால் காவிரி குடிநீர் தேக்கி வைக்க முடியவில்லை. எனவே நிரந்தரமாக காவிரி குடிநீர் கிடைக்க நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.



மொடக்குறிச்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருந்தும் பள்ளிக்கு அடிப்படை வசதிகள் இல்லை என்பது இந்த தொகுதி மக்களின் குறையாக உள்ளது. மேலும் இந்த பகுதி மாணவர்களின் கல்வி தரம் உயர அரசு பொறியியல் கல்லூரி அல்லது பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளனர். நெசவாளர்கள் அதிகம் உள்ள சிவகிரி, நஞ்சை ஊத்துக்குளி, தாண்டம்பாளையம், அவல்பூந்துறை ஆகிய பகுதியில் மத்திய அரசால் அமைத்த கிளஸ்டர் செயல்படுவதில்லை.

கொக்கராயன்பேட்டை பெருந்துறை இணைப்பு வெளிச்சுற்று சாலையில் சில இடங்களில் மேம்பாலம் அமைக்க வேண்டும், மக்கள் தொகை அடிப்படையில் 46 புதூர் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:-



1967- கே.ஆர். நல்லசிவம் (சங்கத சோசலிச கட்சி)
1971- சின்னசாமி (தி.மு.க.)
1977- சுப்புலட்சுமி ஜெகதீசன் (அ.தி.மு.க.)
1980- பாலகிருஷ்ணன் (அ.தி.மு.க.)
1984- பாலகிருஷ்ணன் (அ.தி.மு.க.)
1989- கணேசமூர்த்தி (அ.தி.மு.க.)
1991- கவி நிலவு தர்மராசு (அ.தி.மு.க.)
1996- சுப்புலட்சுமி ஜெகதீசன் (தி.மு.க.)
2001- பி.சி.ராமசாமி (அ.தி.மு.க.)
2006- பழனிசாமி (காங்கிரஸ்)
2011- கிட்டுசாமி (அ.தி.மு.க.)
2016- சிவசுப்பிரமணி (அ.தி.மு.க.)
Tags:    

Similar News