செய்திகள்
கூட்டத்தில் மாநில அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி பேசிய காட்சி.

உள்ளாட்சி தேர்தலுக்கு ம.தி.மு.க.வினர் தயாராக வேண்டும் - அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி பேச்சு

Published On 2021-09-13 09:03 GMT   |   Update On 2021-09-13 09:03 GMT
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தல் மக்களே தலைவரை நேரடியாக தேர்வு செய்யாமல் கவுன்சிலர்கள் கூடி தலைவரை தேர்ந்தெடுக்கும் வகையிலான மறைமுக தேர்தலாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.
பல்லடம்:

திருப்பூர் மாவட்ட ம.தி.மு.க., செயற்குழு கூட்டம் பல்லடத்தில் தனியார் உணவு விடுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட ம.தி.மு.க., செயலாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் முத்துரத்தினம் முன்னிலை வகித்தார். பல்லடம் நகர செயலாளர் பாலசுப்பிரமணியம் வரவேற்றார்.  

கூட்டத்தில் ம.தி.மு.க., மாநில அவைத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான திருப்பூர் துரைசாமி பேசியதாவது:

தமிழகத்தில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோவின் காலாடி படாத இடமே இல்லாத அளவிற்கு அனைத்து ஊர்களுக்கும் அவர் சென்று ம.தி.மு.க., கொடியை ஏற்றி வைத்துள்ளார். 

தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க. அங்கம் வகித்தாலும் தனது கொள்கை, லட்சியத்தில் இருந்து பின்வாங்கவில்லை. தனித்துவத்துடன் தொடர்ந்து ம.தி.மு.க., இயங்கி வருகிறது. அண்ணா பிறந்தநாள் விழாவை எழுச்சியுடன் அனைத்து இடங்களிலும் கொடியேற்றி விழா நடத்த வேண்டும். 

ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். விரைவில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் அதிக இடங்களில் ம.தி.மு.க.வினர் போட்டியிட வேண்டும். அதற்காக தற்போது இருந்தே தயாராக வேண்டும். 

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தல் மக்களே தலைவரை நேரடியாக தேர்வு செய்யாமல் கவுன்சிலர்கள் கூடி தலைவரை தேர்ந்தெடுக்கும் வகையிலான மறைமுக தேர்தலாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.

எனவே வார்டுகளில் ம.தி.மு.க.வினர் அதிக அளவில் போட்டியிட இடங்களை தேர்வு செய்து மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து உதவ வேண்டும் என்றார். 

கூட்டத்தில் அண்ணா பிறந்த நாள் விழாவை மாவட்டம் முழுவதும் கட்சி கொடியேற்று விழா நடத்தி ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்குதல், வரும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் பல்லடம் நகராட்சி தலைவர் பதவியை ம.தி.மு.க.விற்கு ஒதுக்க வேண்டும்.

பல்லடத்தில் போக்குவரத்து நெருக்கடியை போக்க அண்ணா நகர் முதல் பனப்பாளையம் வரை மேம்பாலம் கட்டி தர வேண்டும். பல்லடம் அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவை ரத்த வங்கி வசதியுடன் அமைத்து தர வேண்டும். மேலும் கூடுதலாக படுக்கை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். 

பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான காலியாக உள்ள கடைகளை வாடகைக்கு விட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் மாவட்டம் முழுவதும் சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இதில் பொள்ளாச்சி முன்னாள் எம்.பி. டாக்டர் கிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம் உள்படநிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் பல்லடம் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம் நன்றி கூறினார்.
Tags:    

Similar News