செய்திகள்
அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு- 16 கட்சிகள் எதிர்ப்பு, 5 கட்சிகள் ஆதரவு

Published On 2019-07-08 16:07 GMT   |   Update On 2019-07-08 16:07 GMT
முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் 16 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 5 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, சில மாநிலங்களில் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ள நிலையில், தமிழகத்திலும் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் அமல்படுத்தப்படவில்லை. பிற மாநிலங்களில் 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீட்டுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில், தமிழகத்தில் மட்டும் சிறப்பு நிகழ்வாக 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு சட்டப்பாதுகாப்பு பெறப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், தமிழகத்தில் 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 25 சதவீத இடம் அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.  எனவே, தமிழகத்தில் 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே கடந்த 2-ந் தேதி தமிழக  சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், “முற்பட்ட  வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது சமூகநீதிக்கு எதிரானது. இந்த பிரச்சினை தொடர்பாக, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட  அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்கும் விதமாக அனைத்துக் கட்சி  கூட்டத்தை நடத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், இந்த பிரச்சினை குறித்து ஆலோசிப்பதற்காக சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் அரசியல் கட்சிகள் தரப்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், கல்வி, வேலைவாய்ப்பில் 69% இடஒதுக்கீட்டை தமிழக அரசு தொடர்ந்து கட்டிக்காத்து வருகிறது. 10 சதவீத  இடஒதுக்கீடு வழங்க மாநில அரசு விண்ணப்பித்தால் கூடுதலாக 1000 மருத்துவ இடங்களை பெற முடியும். நடைமுறையில் உள்ள ஒதுக்கீட்டின்படி 586  மருத்துவ இடங்கள் இடஒதுக்கீடு பிரிவுக்கு கூடுதலாக கிடைக்கும் எனக் கூறியுள்ளார்.

69% இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்படாமல் 10% இடஒதுக்கீடு வழங்குவதை  தமிழக காங்கிரஸ் ஆதரிக்கிறது என கூட்டத்தில் தமிழக காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். 69% இட ஒதுக்கீடு முறையே தமிழகத்தில் தொடர வேண்டும் என முக ஸ்டாலின் வலியுறுத்தினார். முடிவில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு தொடர்பாக  நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் 16 கட்சிகள் எதிர்ப்பும். 5 கட்சிகள் ஆதரவும் தெரிவித்துள்ளன. 
Tags:    

Similar News