இந்தியா
சரத் பவார், மம்தா சந்திப்பு

ராகுல் தலைமை ஏற்க எதிர்ப்பு தெரிவிக்கும் சரத்பவார்-மம்தா

Published On 2021-12-01 12:47 GMT   |   Update On 2021-12-01 12:47 GMT
மத்தியில் வலிமையான மாற்றுத் தலைமை தேவை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
மும்பை:

மத்தியில் ஆளும் பாஜக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை இணைத்து புதிய கூட்டணியை உருவாக்கும் நடவடிக்கையில் மேற்கு வங்காள முதலமைச்சரும், திரினாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார். 

அதன் ஒரு பகுதியாக மும்பையில் இன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை அவர் சந்தித்தார். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து இவரும் விவாதித்தனர். பின்னர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். 

அப்போது பேசிய சரத்பவார்,  வரும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு ஆலோசித்ததாகவும் வலிமையான ஒரு மாற்றுத் தலைமை தேவை குறித்து விவாதித்ததாகவும் கூறினார். மம்தா பானர்ஜியுடனான விவாதம் தங்களுக்கு மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஆளும் கூட்டணிக்கு மாற்றாக தேசிய அளவில் ஒருமித்த கருத்து கொண்ட கூட்டுத்தலைமை அமைய வேண்டும் என்பது அவரது விருப்பம் என்றும் சரத்பவார் குறிப்பிட்டார். காங்கிரஸ் உள்பட பாஜகவிற்கு எதிரான எந்த கட்சியாக இருந்தாலும் இங்கு வரலாம் என்று சரத்பவார் விளக்கமளித்தார்.

பின்னர் பேசிய மம்தா பானர்ஜி, சரத்பவார் ஒரு மூத்த அரசியல் தலைவர் என்றும் அரசியல் கட்சிகளின் நிலை குறித்து அவரிடம் விவாதித்தாகவும் கூறினார். சரத்பவாரின் கருத்துக்களை தாம் ஏற்றுக் கொள்வதாகவும் குறிப்பிட்ட மம்தா தற்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி இல்லை என்றார். 

மத்தியில் அமையும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை ஏற்பதை மம்தா விரும்பவில்லை என்று தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு வலு சேர்க்கும்வகையில் சரத்பவாருடன் அவர் ஆலோசனை நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News