ஆன்மிகம்
வள்ளியூர் சுந்தர பரிபூரண பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தபோது எடுத்தபடம்.

வள்ளியூர் சுந்தர பரிபூரண பெருமாள் கோவில் ஆவணி தேரோட்டம்

Published On 2019-09-11 06:32 GMT   |   Update On 2019-09-11 06:32 GMT
வள்ளியூர் சுந்தர பரிபூரண பெருமாள் கோவில் ஆவணி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
வள்ளியூர் சுந்தர பரிபூரண பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் ஆவணி மாதம் நடக்கும் தேரோட்ட திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். அதன்படி இந்தாண்டு தேரோட்ட திருவிழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், கும்பாபிஷேகமும் நடந்தது.

பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 11 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

10-ம் திருநாளான நேற்று திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதனை முன்னிட்டு காலை 10.35 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, கோவிந்தா கோபாலா என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு வீதிகளிலும் சென்று மீண்டும் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் வள்ளியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பெருமாள் பக்தர்கள் குழு மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News