செய்திகள்
கோப்புப்படம்

ஆந்திராவில் மதுபானம் விலை இரு மடங்கு உயர்வு

Published On 2019-11-23 05:23 GMT   |   Update On 2019-11-23 05:23 GMT
ஆந்திராவில் மதுபானங்களின் விலை இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பார்களுக்கும் வழங்கப்பட்ட லைசென்ஸ் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
நகரி:

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு ஜெகன்மோகன்ரெட்டி, தான் தேர்தல் பிரசாரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்.

இதற்காக பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்திருந்தார். ஆந்திராவில் படிப்படியாக மது விலக்கு அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்து இருந்தார்.

அதன்படி மதுபான கடைகளை அரசே கையகப்படுத்தி நடத்தி வருகிறது.

இந்த கடைகள் மாநில பானங்கள் கார்ப்பரேசன் லிமிடெட் கீழ் கடந்த அக்டோபர் 1-ந்தேதி முதல் இயங்கி வருகிறது. பார்களை நடத்த தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஆந்திராவில் மதுபானக் கடைகளின் எண்ணிக்கையை குறைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் இந்த திட்டத்திற்கான விதிமுறைகளை வகுப்பதற்காகவும் நிலுவையில் உள்ள வரியை வசூலிப்பதற்காகவும் செயல்முறையை உருவாக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டார்.


இந்த நிலையில் ஆந்திராவில் மதுபானங்களின் விலை இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பார்களுக்கும் வழங்கப்பட்ட லைசென்ஸ் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

இதற்காக புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி உள்நாட்டு மதுபானங்களில் குவாட்டர் பாட்டில் ரூ.60 ஆகவும், 375 மி.லிட்டர் ரூ.120 ஆகவும், 750 மி.லிட்டர் ரூ.240 ஆகவும், 1000 மி.லிட்டர் ரூ.300 ஆகவும், 2000 மி. லிட்டர் ரூ.750 ஆகவும், இரு மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. மினி பீர் ரூ.30 லிருந்து ரூ.60 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

பீர் விலையில் 330 மி.லிட்டர் ரூ.30, 650 மி.லிட்டர் ரூ.60, 30 ஆயிரம் மி.லிட்டர் ரூ.3 ஆயிரம், 50 ஆயிரம் மி.லிட்டர் ரூ.6 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2 ஆண்டுகள் பார் நடத்துவதற்கான லைசென்ஸ் பெற அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் பார் பதிவு கட்டணம் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 50 ஆயிரம் வரை மக்கள் தொகை கொண்ட பகுதியில் பார் நடத்த லைசென்ஸ் கட்டணம் ரூ.25 லட்சமாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோல் 50,001 லிருந்து 5 லட்சம் வரை மக்கள் தொகை கொண்ட பகுதியில் பார் லைசென்சுக்கு ரூ.50 லட்சமாகவும் 5 லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை கொண்ட பகுதிக்கு ரூ.75 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர ஓட்டல்களில் பார் நடத்த லைசென்ஸ் கட்டணம் ரூ.1½ கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டத்தின்படி 40 சதவீத பார்கள் மூடப்படுகின்றன. தற்போது 797 பார்கள் செயல்பட்டு வந்தன. இதில் 478 பார்களுக்கு மட்டும் புதிய லைசென்சுக்கு விண்ணப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 319 பார்கள் மூடப்படுகின்றன. ஏற்கனவே ஆந்திர அரசு 700 மதுபான கடைகளை மூடியது என்பது குறிப்பிடத்தககது. தற்போது அங்கு 3500 மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது.
Tags:    

Similar News