செய்திகள்
அரசு பேருந்துகள் (கோப்புப்படம்)

பஸ்கள் நாளை வழக்கம் போல் ஓடும்- வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது

Published On 2021-02-24 04:28 GMT   |   Update On 2021-02-24 04:28 GMT
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் தமிழ்நாடு முழுவதும் பஸ்களை இயக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
சென்னை:

போக்குவரத்து கழக ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். போக்குவரத்து கழகங்களில் செயல்படும், தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., எச்.எம்.எஸ்., டி.டி.எஸ்.எப்., எம்.எல்.எப்., ஏ.ஏ.எல்.எல்.எப்., டி.டபிள்யூ.யு. ஆகிய தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக கூறி உள்ளனர்.

இதுகுறித்து தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி. கூறியதாவது:-

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே சம்பள உயர்வு தந்திருக்க வேண்டும். 2019-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி முதல் சம்பள உயர்வு தரப்படாதது ஊழியர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

போக்குவரத்து கழகங்களுக்கு தேவையான நிதியை பட்ஜெட்டிலும் அரசு ஒதுக்குவதில்லை. தொழிலாளர்களின் சேமிப்பு பணத்தை வைத்துக் கொண்டு போக்குவரத்து கழகங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை சுமார் 8 ஆயிரம் கோடி தொழிலாளர்களின் பணம் செலவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு பணி ஓய்வு கால பலன்கள் ஓய்வு பெறும் நாளில் கிடைப்பதில்லை.

இந்த ஆட்சியில் போக்குவரத்து கழக தொழிலாளர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் 22 ஆயிரம் பஸ்கள் உள்ளது. இதில் 15 ஆயிரம் பஸ்கள்தான் இயக்கப்படுகிறது. 7 ஆயிரம் பஸ்கள் டெப்போவிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

ஊழியர்களின் பிரச்சனையை அரசுக்கு பலமுறை எடுத்துக்கூறியும் அரசு அதை தீர்ப்பதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கண் துடைப்புக்குத்தான் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

இதனால் போக்குவரத்து கழக ஊழியர்கள் நாளை முதல் கட்டாயம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். சுமார் 1 லட்சம் பேர் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை சமாளிக்க அரசு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறது.

அண்ணா தொழிற்சங்கம், பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜனதா உள்ளிட்ட ஆளும் கட்சிக்கு ஆதரவான தொழிற்சங்க ஊழியர்கள் மூலம் பஸ்களை இயக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், நாளைக்கு வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது என்றும் அரசு உயர் அதிகாரி தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து டெப்போக்களில் இருந்தும் பஸ்களை இயக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு டெப்போக்கள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதிகாரி தெரிவித்தார்.

தொழிற்சங்க விதிப்படி ஸ்டிரைக்கில் ஈடுபட வேண்டுமானால் முறையான நோட்டீஸ் கொடுத்து, கால அவகாச இடைவேளைக்கு பிறகுதான் போராட முடியும். ஆனால் திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது சட்டப்படி தவறாகும்.

எனவே மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் தமிழ்நாடு முழுவதும் பஸ்களை இயக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு உள்பட 9 தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் வேலை நிறுத்த போராட்டம் குறித்து இன்று மாலை 4 மணிக்கு சென்னை பல்லவன் இல்லம் அருகே விரிவாக ஆலோசனை நடத்த உள்ளனர்.
Tags:    

Similar News