செய்திகள்
நீர்வரத்து அதிகரிப்பால் அமராவதி அணை கடல் போல் காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.

அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2021-06-15 06:50 GMT   |   Update On 2021-06-15 06:50 GMT
பழைய ஆயக்கட்டு பாசனத் திலுள்ள நிலங்களுக்கு கடந்த மே மாதம் 16-ந்தேதி முதல் நீர் வழங்கப்பட்டு வருகிறது.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பழைய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள நிலங்களுக்கு கடந்த மே மாதம் 16-ந்தேதி முதல் நீர் வழங்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.

மூணாறு, தலையாறு, கொடைக்கானல் மலையின் மேற்கு பகுதிகள் மற்றும் வால்பாறை கிழக்கு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக அமராவதி அணைக்கு நீர்வரத்து தொடங்கியுள்ளது. மலைப் பகுதிகளில் தொடங்கியுள்ள பருவமழை காரணமாக பல மாதத்திற்கு பின் பாம்பாறு, தேனாறு, சின்னாறு மற்றும் காட்டாறுகள் வாயிலாக அணைக்கு கடந்த ஒரு வாரமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி அணை நீர் மட்டம் மொத்தமுள்ள 90 அடியில் 73.72 அடியாகவும், நீர் இருப்பு மொத்த கொள்ளளவான 4,047 மில்லியன் கன அடியில்  2,675.12 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 348 கன அடியாக  உள்ளது. உடுமலை பகுதிகளிலும் இரு நாட்களாக லேசான மழை பெய்து வருவதோடு குளிர் காற்றும் வீசி வருவதால், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை காணப்படுகிறது.
Tags:    

Similar News