தமிழ்நாடு
பா.ஜ.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் மத்திய மந்திரி எல்.முருகன் நேர்காணல் நடத்திய காட்சி.

கோவையில் பா.ஜ.க.வினரிடம் நேர்காணல் நடத்திய மத்திய மந்திரி எல்.முருகன்

Published On 2022-01-29 08:57 GMT   |   Update On 2022-01-29 08:57 GMT
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகள் மற்றும் 7 பேரூராட்சிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளவர்களிடம் இன்று நேர்காணல் நடத்தப்படுகிறது.
கோவை:

கோவை மாவட்டத்தில் கோவை மாநகராட்சி மற்றும் 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் 831 கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. மாநகராட்சியில் மட்டும் 100 வார்டுகளுக்கு தேர்தல் நடக்கிறது.

அ.தி.மு.க. கூட்டணி அங்கம் வகிக்கும் பாரதிய ஜனதா கோவையில் கணிசமான இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலையிடம் கோவை மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இந்தநிலையில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று கோவை வந்தார். கோவை காந்திபுரம் சித்தாபுதூரில் உள்ள பாரதிய ஜனதா அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது கோவையில் பாரதிய ஜனதாவுக்கு கூடுதல் வார்டுகளை பெற்று தர வேண்டும் என நிர்வாகிகள் அவரிடம் கேட்டுக்கொண்டனர்.

தொடர்ந்து எல்.முருகன், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினார். நேர்காணலில் பங்கேற்றவர்களிடம் மக்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்ய திட்டமிட்டுள்ளீர்கள்?, குறிப்பிட்ட வார்டுகளில் எத்தனை ஆண்டுகளாக வசிக்கிறீர்கள்? என்பது உள்பட பல கேள்விகளை எல்.முருகன் எழுப்பி அவர்களிடம் பதிலை பெற்றார்.

மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகள் மற்றும் 7 பேரூராட்சிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளவர்களிடம் இன்று நேர்காணல் நடத்தப்படுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கிய நேர்காணல் இரவு 9 மணி வரை தொடர்ந்து நடக்கிறது.

7 பேரூராட்சிகளில் மட்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து 105 பேர் மனு கொடுத்துள்ளனர். இவர்களிடமும், மாநகராட்சி வார்டில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்கள் என மொத்தம் 475 பேரிடம் இன்று நேர்காணல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இதுபற்றி மத்திய மந்திரி எல்.முருகனிடம் கேட்டபோது இங்கு நேர்காணல் மட்டுமே நடத்தப்படுகிறது. எத்தனை வார்டுகளில், எந்தெந்த வார்டுகளில் போட்டியிடுவது என்பது பற்றி பா.ஜ.க. மாநில தலைவர் அறிவிப்பார் என தெரிவித்தார்.
Tags:    

Similar News