செய்திகள்
முன்னாள் அமைச்சர் பழனியப்பன்

அ.தி.மு.க.வில் இணைய தூது அனுப்பவில்லை- முன்னாள் அமைச்சர் பழனியப்பன்

Published On 2019-11-16 08:16 GMT   |   Update On 2019-11-16 08:16 GMT
அ.தி.மு.க.வில் இணைய தூது அனுப்பவில்லை என்று முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கூறியுள்ளார்.

தர்மபுரி:

அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் இன்று தர்மபுரி மாவட்டம் அரூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் அ.ம.மு.க.வினர் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வில் இணைகின்றனர். ஆனால் முன்னாள் அமைச்சர் பழனியப்பன், பல்வேறு கட்சிகளுக்கு தூது அனுப்பிக் கொண்டிருக்கிறார். அ.தி.மு.க.வில் இணைவதற்கும் தூது அனுப்பி இருக்கிறார். அவர் வந்தால் நாங்கள் அவரை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொள்ள மாட்டோம் என்று தெரிவித்திருக்கிறார்.



ஆனால் நான் எந்தக் கட்சிக்கும் தூது அனுப்ப வில்லை, முதல்-அமைச்சர் தான், எனக்கும் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.ஆர். முருகனுக்கும் தூது அனுப்பினார். அவர் ஏதோ அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று விட்டோம். முழு பலத்தை அடைந்து விட்டோம் என்ற இருமாப்பில், முதல்-அமைச்சர் என்ற நிலையையும் தாண்டி பேசி வருகிறார்.

மறுபுறம் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, அ.தி.மு.க.விற்கு பழனியப்பன் வந்தால், அவரை இணைப்பது பற்றி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களுடன் ஆலோசனை செய்து இணைத்துக் கொள்வோம் என்று தெரிவித்திருக்கிறார். இப்படி அ.தி.மு.க.வினர் ஒருவருக்கொருவர் பல்வேறு நிலைப்பாடுகளை எடுத்து வருகிறார்கள். இதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News