செய்திகள்
கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

ரேசன் பொருட்களை கடத்தினால் நடவடிக்கை- நீலகிரி கலெக்டர் எச்சரிக்கை

Published On 2019-11-01 10:15 GMT   |   Update On 2019-11-01 10:15 GMT
ரேசன் பொருட்களை கடத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் நியாய விலைக்கடைகளில் விநியோகம் செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களை வெளிமாநிலங்களுக்கு கடத்தி செல்வதாக 18 பேர் மீது குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் செயல்பட்டு வரும் 407 நியாய விலைக்கடைகளில் 2,13,023 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நியாய விலைக்கடைகளில் விநியோகம் செய்யப்படும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பொதுமக்களிடம் இருந்து பெற்று சில சமூக விரோதிகள் லாப நோக்கத்துடன் வெளிமாநிலங்களுக்கு கடத்தி சென்று வெளிச்சந்தையில் விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது.

இதையடுத்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின்படி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குடிமைபொருள் வழங்கல் துறையினர் மற்றும் குற்றப்புலனாய்வு துறை போலீசார் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கடந்த 2 மாதங்களில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 1218 கிலோ ரே‌ஷன் அரிசி மற்றும் 6 வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் கைப்பற்றப்பட்டு இதில் ஈடுபட்ட 18 பேர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போல் நடக்கும் முறைகேடுகளை தடுக்க கடந்த மாதம் குடிமை பொருள் வழங்கல் மற்றும் கூட்டுறவு துறையினரால் நியாயவிலைக்கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது 198 இடங்களில் அந்தந்த நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு ரூ.36,260 அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களை வெளிமாவட்டம் அல்லது வெளிமாநிலங்களுக்கு கடத்தி செல்வதாக தெரிய வந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தின்கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
Tags:    

Similar News