செய்திகள்
டாக்டர்

சிறிய, நடுத்தர ஆஸ்பத்திரிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும்?- டாக்டர்கள் எச்சரிக்கை

Published On 2021-04-22 06:36 GMT   |   Update On 2021-04-22 06:36 GMT
அரசு மற்றும் கார்ப்பரேட் ஆஸ்பத்திரிகளில் தற்போது போதுமான அளவு ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு உள்ளன. ஆனால் ஒரு சில சிறிய, நடுத்தர ஆஸ்பத்திரிகளுக்கு ஆக்சிஜன் வரத்து குறைந்து விட்டது.
சென்னை:

கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு ஆக்சிஜன் முக்கிய தேவையாக உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் சப்ளை உள்ளது. தட்டுப்பாடு இல்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக தினமும் 200 டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் இருந்து ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு 45 டன் ஆக்சிஜன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் இது எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. தமிழக அரசிடம் கலந்து பேசாமலே மத்திய அரசு அனுப்பி இருப்பது தமிழக அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. மாநில அரசு உற்பத்தி செய்யும் ஆக்சிஜனை எடுத்து செல்லும் மத்திய அரசின் நடிவடிக்கைகளால் உயிர்காக்கும் ஆக்சிஜனை தடையின்றி வழங்கும் மாநிலங்களின் திட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.



இதை மத்திய சுகாதார மந்திரியின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாட்டை சரிசெய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. என்றாலும் தற்போதைய சூழ்நிலையில் தனியார் நடத்தும் சிறிய, நடுத்தர ஆஸ்பத்திரிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சிறிய, நடுத்தர தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் தங்கள் ஆஸ்பத்திரிக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வரத்து குறைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளையாவதில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

இது குறித்து சிறிய மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள் கூறியதாவது:-

ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் கார்ப்பரேட் ஆஸ்பத்திரிகளில் தற்போது போதுமான அளவு ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு உள்ளன. ஆனால் ஒரு சில சிறிய, நடுத்தர ஆஸ்பத்திரிகளுக்கு ஆக்சிஜன் வரத்து குறைந்து விட்டது.

இதனால் அடுத்த சில நாட்களில் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாகவே இது போன்ற ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளை சிகிச்சைக்கு அனுமதிக்க முடியாதநிலை ஏற்பட்டு உள்ளது. சிலரை வேறு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கும் நிலையும் உள்ளது. அடுத்த சில வாரங்களில் ஆக்சிஜன் சப்ளை அதிகரிக்காவிட்டால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு உள்ள நோயாளிகளின் நிலையும் சிக்கலாகும்.

இன்றைய நாட்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக ஆபத்தான நோயாளிகளை ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்க முடியாத நிலை ஏற்படும். எனவே தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைக்க உடனடியாக அரசு தீவிர நடவடிக்கை எடுப்பது அவசியம்.

தற்போது நிலைமை மோசமாக இல்லை என்றாலும் ஒரு சில நாட்களில் ஆக்சிஜன் வினியோகம் பாதிக்கப்பட்டால் சிறிய, நடுத்தர ஆஸ்பத்திரிகள் நிலைமை பாதிக்கப்படும். நோயாளிகளின் உடல் நிலையை பொறுத்து ஆக்சிஜன் தேவை அதிகமாகும்.

சப்ளை அதிகமானால் ஆஸ்பத்திரிகளில் இடம் இல்லை என்றாலும் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற முடியும். ஆக்சிஜன் சப்ளை அதிகரிக்காவிட்டால் பாதிப்பு அதிகமாகும்.

இவ்வாறு டாக்டர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News