செய்திகள்
தடுப்பூசி போடும் பணி

டெல்லியில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்துவதற்கு போதுமான தடுப்பூசி இல்லை

Published On 2021-04-29 10:52 GMT   |   Update On 2021-04-29 14:33 GMT
18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டம் தொடங்குவது பற்றியும் ஓரிரு நாளில் தெரிவிக்கப்படும் என டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்தர் ஜெயின் கூறினார்.
புதுடெல்லி:

டெல்லியில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை மிக மோசமாக உள்ளது. மாநிலத்திலுள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் ஏற்கனவே நிரம்பிவிட்டன. தடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர்கள் போதுமானதாக இல்லை. நிலைமை மோசமாவதைத் தடுக்க டெல்லி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்தர் ஜெயின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி திட்டம் தொடங்கப்படுமா? என்று கேட்டனர். இதற்கு பதிலளித்து சத்யேந்தர் ஜெயின் கூறியதாவது:-



டெல்லியில் 18 வயது முதல் 44 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் அளவிற்கு, போதுமான தடுப்பூசிகள் இல்லை. தடுப்பூசிக்கான ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. டெல்லிக்கு தடுப்பூசி சப்ளை குறித்த தேதியை தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் இன்னும் தெரிவிக்கவில்லை. தடுப்பூசி வந்ததும் உங்களுக்குத் தெரிவிப்போம். 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டம் தொடங்குவது பற்றியும் ஓரிரு நாளில் தெரிவிக்கப்படும். 

டெல்லியில் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதன்மூலம், புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது, பாதிப்பு விகிதம் படிப்படியாக குறையும் என தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News