செய்திகள்
ஜே.பி.நட்டாவுடன் நிதிஷ் குமார் (கோப்பு படம்)

நிதிஷ் குமார் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் அமித் ஷா, ஜே.பி.நட்டா

Published On 2020-11-16 04:17 GMT   |   Update On 2020-11-16 04:17 GMT
பீகார் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்கும் நிகழ்வில், உள்துறை மந்திரி அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
பாட்னா:

பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்த கூட்டணில் பா.ஜ.க. 74 இடங்களில் வென்று மாநிலத்தில் இரண்டாவது தனிப்பெரும் கட்சியாக வந்தது. அதன் கூட்டணி கட்சிகளான நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும், வி.ஐ.பி. மற்றும் எச்.ஏ.எம்.எஸ். கட்சிகள் தலா 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதையடுத்து புதிய அரசு பதவியேற்பதற்கான நடைமுறைகள் தொடங்கின.

பாட்னாவில் உள்ள நிதிஷ் குமார் இல்லத்தில் நேற்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டமன்றக் குழு தலைவராக (முதல்வர்) நிதிஷ் குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இக்கூட்டம் நிறைவடைந்ததும் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரை சந்தித்த நிதிஷ் குமார், தன்னை ஆட்சியமைக்க அழைக்கும்படி கேட்டுக்கொண்டார். மேலும் எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் கொடுத்தார். ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து பாட்னாவில் இன்று பிற்பகல் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. 

விழாவில் மத்திய உள்துறை மந்திரியும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் பங்கேற்க உள்ளனர். 

நிதிஷ் குமார் 7வது முறையாகவும்,  தொடர்ந்து 4வது முறையாகவும் பீகார் முதல்வராக பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News