செய்திகள்
தமிழக அரசு

அரியர் தேர்வை ரத்து செய்ததில் விதிமீறல்கள் இல்லை- ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு

Published On 2020-11-22 01:08 GMT   |   Update On 2020-11-22 10:53 GMT
அரியர் தேர்வுகளை ரத்து செய்து, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சியடைந்ததாக பிறப்பித்த அறிவிப்பில் எந்த விதிமீறல்களும் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை:

கொரோனா ஊரடங்கால், கலை, அறிவியல் மற்றும் என்ஜினீயரிங் மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கிற்கு பதில் அளித்த பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஆகியவை, தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்தன. அரியர் தேர்வுகளை நடத்தாமல் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது விதிகளுக்கு எதிரானது என்றும் விளக்கம் அளித்தன. இந்த நிலையில், இவ்வழக்கில் தமிழக உயர்கல்வித் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.  அதில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. விரைவில் கல்லூரிகள் திறந்துவிடும் என்ற நம்பிக்கையில், பெரும்பாலான மாணவர்கள், தங்கியிருந்த விடுதிகளிலும், வீடுகளிலும் புத்தகங்கள், லேப்டாப்கள் உள்ளிட்டவற்றை வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.ஆனால், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. கல்லூரிகள் எல்லாம், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கும் இடமாக மாற்றப்பட்டன. அந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதும், கல்லூரிகள் சிகிச்சை மையங்களாகவும், தனிமைப்படுத்தும் வார்டுகளாகவும் மாற்றப்பட்டன. இதனால் கல்லூரிகள் திறக்கப்பட வில்லை.

அதுமட்டுமல்ல, இந்த ஊரடங்கால் மாணவர்களின் பெற்றோர் பலர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். அவர்கள் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல், சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். இதுபோன்ற சூழ்நிலையில், மாணவர்கள் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டும், மனிதாபிமானத்துடன் முடிவு எடுத்தும், செமஸ்டர், அரியர் தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது.

ஊடரங்கு காலத்தில் தேர்வுகளை நடத்துவது குறித்து, பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்ட விதிமுறைகளை பின்பற்றியே இந்த முடிவை தமிழக அரசு எடுத்தது. அதாவது, 50 சதவீத மதிப்பெண் இன்டர்னல் மதிப்பெண்களில் இருந்தும், மீதமுள்ள 50 சதவீத மதிப்பெண், மாணவர்களின் முந்தைய செமஸ்டர் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலும் கணக்கிடப்பட்டது.

இந்த நடைமுறை, இறுதி ஆண்டு மாணவர்களை தவிர பிற மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இதற்காக ஒரு குழுவை அமைத்து, முழுவதுமாக ஆய்வு செய்து, பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு உட்பட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த முடிவில் எந்த ஒரு விதிமீறலும் இல்லை. எனவே, தமிழக அரசின் முடிவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நாளை (திங்கட்கிழமை) ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.
Tags:    

Similar News