செய்திகள்
கைது

கோவை, நீலகிரியில் பணம் பட்டுவாடா செய்த அ.தி.மு.க.வினர் 12 பேர் கைது

Published On 2021-04-04 10:05 GMT   |   Update On 2021-04-04 10:05 GMT
கோவை மாவட்டத்தில் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை:

கோவை மாவட்டத்தில் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அரசியல் கட்சியினர் பணம் பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குகிறார்களா? என பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை காமராஜர்புரம் பகுதியில் வாக்காளர்களுக்கு அ.தி.மு.க.வினர் பணம் கொடுப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் வந்தது. உடனடியாக அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது 2 பேர் சந்தேகத்திற்கிடமாக சுற்றி கொண்டிருந்தனர்.

அவர்களை பிடித்து விசாரித்த போது அதே பகுதியை சேர்ந்த விஜீஸ், அரவிந்த என்பதும், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து ரூ.2.36 லட்சம் பணம் மற்றும் வாக்காளர் பட்டியலை பறிமுதல் செய்தனர்.

ஆர்.எஸ்.புரம் பகுதியிலும் வாக்காளர்களுக்கு வீடு, வீடாக சென்று அ.தி.மு.கவினர் பணம் வினியோகித்து வருவதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அங்கு சென்றனர்.

அப்போது அங்கு 6 பேர் ஓட்டுக்கு பணம் கொடுத்து கொண்டிருந்தனர். இதை பார்த்தும் அதிகாரிகள் 6 பேரையும் பிடித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ஹரிகிஷோர், ஹரிஹரன், சக்திவேல், அசோக், மெல்வின், சேதுராமன் என்பது தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.39 ஆயிரம் பணம் மற்றும் வாக்காளர் பட்டியலையும் பறிமுதல் செய்தனர். சிறிது நேரம் கழித்து அவர்களை அனைவரையும் ஜாமீனில் விடுவித்தனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பஜார் பகுதியில் அ.தி.மு.க.வினர் வீடு, வீடாக சென்று பணம் பட்டுவாடா செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் பறக்கும் படை அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கு பணம் பட்டுவாடா கொடுப்பது உறுதியானது. இதையடுத்து பணம் கொடுத்ததாக சுப்பிரமணி(35), சிவராஜ்(30), எம்.சுப்பிரமணி(40), முருகன்(52) ஆகியோரை பிடித்து கோத்தகிரி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.59 ஆயிரத்து 500-யை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News