செய்திகள்
பிரதமர் மோடி

கொரோனா பரவல் அதிகரிப்பு: முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை

Published On 2021-04-07 07:35 GMT   |   Update On 2021-04-07 07:35 GMT
மத்திய அரசு கொரோனா பரவலை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும், அறிவிப்புகளையும் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை:

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து மத்திய அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களும் நோய் தொற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்.

இந்தநிலையில் பிரதமர் மோடி நாளை காலை அனைத்து மாநில முதல்- மந்திரிகளுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடி ஆலோசனை நடத்த உள்ளார்.

அப்போது கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுகள் மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் பற்றி அவர் விரிவாக கேட்டு அறிகிறார்.

இந்த ஆலோசனைக்கு பிறகு கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தெரிகிறது.

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் அடுத்து வரும் 4 வாரங்கள் மிகவும் முக்கியமானது என்று மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது.


நோய் பரவலை தடுக்க பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், அலட்சியமாக இருக்கக் கூடாது என்று மத்திய அரசு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பொது மக்களில் பலர் அதனை கண்டு கொள்வதில்லை. தேர்தல் பிரசாரங்களின் போது இது கண்கூடாக தெரிய வந்தது. முககவசம் அணியாமலேயே பலர் கட்சிகூட்டங்களில் கலந்து கொண்டனர்.

இதையடுத்து மத்திய அரசு கொரோனா பரவலை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும், அறிவிப்புகளையும் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் நடத்தும் ஆலோசனைக்கு பிறகு இந்த புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளது.

Tags:    

Similar News