செய்திகள்
நாகை அருகே அறுவடை செய்யப்பட்ட வெள்ளரிக்காய்கள் குவித்து வைக்கப்பட்டிருந்த காட்சி.

நாகையில் வெள்ளரி அறுவடை பணி மும்முரம்

Published On 2021-04-29 11:46 GMT   |   Update On 2021-04-29 11:46 GMT
நாகையில் வெள்ளரி அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா கட்டுப்பாடுகளால் விற்பனை குறைவு என விவசாயிகள் கூறினர்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டத்தின் தெற்கு பொய்கைநல்லூர், காமேஸ்வரம், விழுந்தமாவடி, வேட்டைகாரன் இருப்பு, செம்பியன்மகாதேவி, வெள்ளப்பள்ளம், வேதாரண்யம் கோடியக்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் அதிக அளவில் நிலக்கடலை, வெள்ளரி சாகுபடி செய்யப்படுவது வழக்கம். டிசம்பர் மாதத்தில் சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்குவார்கள். ஆனால் கடந்த ஜனவரி மாதம் பெய்த தொடர் கனமழை காரணமாக சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலை, வெள்ளரி பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து மழை விட்ட பிறகு ஜனவரி மாத கடைசியில் பெரும்பாலான விவசாயிகள் வெள்ளரி சாகுபடி மேற்கொண்டனர். தற்போது 3 மாத பயிரான வெள்ளரி சீசன் தொடங்கி உள்ளது.

தெற்கு பொய்கை நல்லூர், பூவைத் தேடி, காமேஸ்வரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளரி அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஒரு கிலோ வெள்ளரிக்காய் ரூ.20 முதல் ரூ.30 வரையும், வெள்ளரி பழம் ரூ.30 முதல் ரூ.60 வரையும் அளவுக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது.

நாகை மாவட்டத்திலிருந்து திருவாரூர், தஞ்சை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் வெள்ளரிக்காய் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் வியாபாரிகள் வெள்ளரிக்காய்களை வாங்க வராததால் விற்பனை குறைந்துள்ளது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதால் வெள்ளரி விற்பனை சூடுபிடித்துள்ளது. நாகை நகரில் ஆங்காங்கே விற்பனை செய்யும் வெள்ளரி பிஞ்சுகளை பொதுமக்கள் தேடி வந்து ஆர்வமாக வாங்கிச் செல்கிறார்கள்.
Tags:    

Similar News