செய்திகள்
சித்தராமையா

காந்தியுடன் மோடியை ஒப்பிட்டு பேசிய டிரம்புக்கு போதிய ஞானம் இல்லை- சித்தராமையா

Published On 2019-10-03 01:58 GMT   |   Update On 2019-10-03 01:58 GMT
காந்தியுடன் மோடியை ஒப்பிட்டு பேசிய டிரம்புக்கு போதிய ஞானம் இல்லை என்று சித்தராமையா கடுமையாக தாக்கி பேசினார்.
பெங்களூரு :

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா நேற்று பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்தது. அவரது உருவ படத்திற்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். பின்னர் குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து சுதந்திர பூங்காவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் நல்லண்ண நடைபயணம் மேற்கொண்டனர்.

பின்னர் சுதந்திர பூங்காவில் நடந்த கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:-

மாநிலத்தில் மழை, வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து வீதிக்கு வந்துள்ளனர். பலர் உயிர் இழந்துள்ளனர். ஆனால் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க மத்திய, மாநில பா.ஜனதா அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநிலத்தில் மழை, வெள்ளத்தை பார்வையிட பிரதமர் மோடி இதுவரை வரவில்லை. நமது மாநிலம் மட்டுமின்றி, அவரது சொந்த மாநிலமான குஜராத்துக்கு கூட சென்று மழை பாதிப்புகளை பிரதமர் பார்வையிடவில்லை. ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா என மழை பாதித்த எந்த மாநிலத்திற்கும் பிரதமர் மோடி செல்லவில்லை.



பீகாரில் மழை பாதிப்பு ஏற்பட்டதும் டுவிட்டர் மூலம் தேவையான உதவிகள் செய்யப்படும் என்று பிரதமர் கூறுகிறார். ஏனெனில் அங்கு பா.ஜனதா கூட்டணி அரசு நடைபெறுகிறது. கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்தாலும் நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு ஒரு ரூபாய் கூட இன்னும் வழங்கவில்லை. மழை பாதிப்பு உண்டாகி 50 நாட்கள் ஆகிறது. அப்படி இருந்தும் நிவாரணம் வழங்கவில்லை என்றால், மத்திய அரசு செத்து போய் விட்டது என்று நினைக்கிறேன். மோடி இந்த நாட்டிற்கு பிரதமராக இருப்பது ஒரு மோசமான சூழ்நிலையாகும். அவர் பிரதமராக இருப்பது துரதிர்ஷ்டவசமானது.

உள்நாட்டில் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண மோடியால் முடியவில்லை. வெளிநாட்டுக்கு சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியை இந்தியாவின் தந்தை என்று கூறி இருக்கிறார். டிரம்புக்கும், மோடிக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாக தெரியவில்லை.

மகாத்மா காந்தியை தான் தேச பிதா என்று கூறுகிறோம். காந்தியுடன் பிரதமரை ஒப்பிட்டு டிரம்ப் பேசி இருப்பதன் மூலம், அவருக்கு போதிய ஞானம் இல்லை என்று தெரிகிறது. காந்தியடிகள் பற்றி அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவிடம் கேட்டு டிரம்ப் அறிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.
Tags:    

Similar News