செய்திகள்
மருத்துவமனையை தண்ணீர் சூழ்ந்ததால் நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றும் ஊழியர்கள்

பீகாரில் கனமழை- வெள்ளத்தில் சிக்கி இதுவரை 29 பேர் உயிரிழப்பு

Published On 2019-09-30 04:55 GMT   |   Update On 2019-09-30 04:55 GMT
பீகார் மாநிலத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாட்னா:

பீகார் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. பாட்னாவில் வெள்ளிக்கிழமை மாலை முதல் இன்று காலை வரை 200 மிமீ மழை கொட்டித் தீர்த்துள்ளது.

இதனால் தாழ்வான பகுதிகள் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்து படகுகள் மூலம் மக்கள் மீட்கப்படுகின்றனர். பாட்னாவில் மட்டும் 26 ஆயிரம் மக்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

பாட்னாவில் வெள்ள நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வதற்காக 2 ஹெலிகாப்டர்களை அனுப்பும்படி விமானப்படைக்கு மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.



மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி இதுவரை 29 பேர் பலியானதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

இதேபோல் உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களிலும் மழை பெய்து வருகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் நாடு முழுவதும் மழை தொடர்பான விபத்துக்களில் 110 பேர் பலியாகி உள்ளனர். உ.பி.யில் மட்டும் 79 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
Tags:    

Similar News