செய்திகள்
விபத்து

பஸ் சக்கரத்தில் சிக்கி சமையல்காரர் பலி

Published On 2019-09-12 08:46 GMT   |   Update On 2019-09-12 08:46 GMT
பஸ் சக்கரத்தில் சிக்கி சமையல்காரர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கீழே தள்ளியவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:

கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் டேவிட் (வயது 46). இவரது மனைவி செல்வி. இருவரும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் தங்கி வேலை பார்த்து வந்தனர். டேவிட் கடைகள் மற்றும் விசே‌ஷ இடங்களுக்கு சென்று சமையல் வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு பஸ் நிலைய வளாகத்தில் உள்ள 1வது பிளாட் பாரத்தில் குடிபோதையில் வந்த டேவிட் மீண்டும் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார்.

அப்போது அருகில் இருந்த ஒருவர், தொடர்ந்து மனைவியுடன் சண்டையிட்ட டேவிட்டை பிடித்து தள்ளி விட்டார்.

இதில் தடுமாறிய டேவிட் பிளாட்பாரத்தை விட்டு கீழே விழுந்தார். அந்த நேரத்தில் அங்கு வந்த பஸ் ஒன்று டேவிட் மீது ஏறி இறங்கியது.

இதில் சம்பவ இடத்திலேயே டேவிட் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து டேவிட்டை கீழே தள்ளியவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அவர் கோயம்பேடு பஸ் நிலையத்தில் தங்கி மார்க்கெட்டில் கூலி வேலை பார்த்து வரும் தேனி மாவட்டம் நரசிங்கபுரத்தை சேர்ந்த சிங்காரவேலன் என்பது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News