செய்திகள்
மயிலாடுதுறையில் இன்று காலை கடைகள் அடைக்கப்பட்டிருந்த போது எடுத்த படம்

மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டி மயிலாடுதுறை- சீர்காழி பகுதிகளில் வியாபாரிகள் கடையடைப்பு

Published On 2019-12-03 10:07 GMT   |   Update On 2019-12-03 10:07 GMT
மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டி மயிலாடுதுறை மற்றும் சீர்காழி பகுதிகளில் வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை:

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரி அமைக்க அரசு அறிவிப்பு வெளியிட கோரி மயிலாடுதுறை, சீர்காழி, மணல்மேடு ஆகிய பகுதிகளில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.

மயிலாடுதுறை நகரில் காந்திஜி சாலை, பட்டமங்கல தெரு, பஸ் நிலையம், கூறைநாடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் கடைகள் அடைக்கபட்டு இருந்தன. இதனால் முக்கிய கடைவீதிகளில் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இதேபோல் சீர்காழி நகரிலும் இன்று வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர். சீர்காழி பஸ் நிலையம், மற்றும் முக்கிய வீதிகளில் உள்ள சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஜவுளி கடைகள், நகை கடைகளும் மற்றும் பெரிய வணிக நிறுவன கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

இதேபோல் மணல்மேடு பகுதியிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இந்த பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

இன்று ஒரே நாளில் மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளில் வியாபாரிகள் திடீர் கடையடைப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி மயிலாடுதுறையில் வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News