செய்திகள்
முதலமைச்சர் முக ஸ்டாலின்

தேவர் ஜெயந்தி விழாவில் ஸ்டாலின் பங்கேற்பு - முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு

Published On 2021-10-21 08:42 GMT   |   Update On 2021-10-21 08:42 GMT
தேவர் ஜெயந்தி விழாவில் அ.தி.மு.க. சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்பட நிர்வாகிகள் மற்றும் சமுதாய தலைவர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துகிறார்கள்.

கமுதி:

ராமநாதபுரம் மாவட் டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராம லிங்கத்தேவரின் 114-வது ஜெயந்தி விழா மற்றும் 59-வது குருபூஜை விழா வருகிற 28, 29, 30 ஆகிய 3 நாட்கள் நடக்கிறது.

30-ந்தேதி குருபூஜை விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

அ.தி.மு.க. சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்பட நிர்வாகிகள் மற்றும் சமுதாய தலைவர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துகிறார்கள்.

தேவர் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். தேவர் நினைவாலயத்திற்கு வந்த அமைச்சரை நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன், நிர்வாகிகள் சத்தியமூர்த்தி,, ரவி, தங்கவேல், போஸ் வரவேற்றனர். அங்குள்ள தேவர் நினைவிடத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் புகைப்பட கண்காட்சி, தேவர் வாழ்ந்த வீடு, தியான மண்டபம், பக்தர்கள் மொட்டை, முளைப்பாரி, பால்குடம் செலுத்தும் பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, பக்தர்கள் காணிக்கை செலுத்தும் இடங்களையும் அமைச்சர் பார்வையிட்டார்.


அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பசும்பொன் முத்துராம லிங்கத்தேவரின் 114-வது பிறந்த நாள் விழா மற்றும் 59-வது குருபூஜை விழா வருகின்ற 30-ந் தேதி அரசு சார்பாக கொண்டாடப்படவுள்ளது.

இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தேவருக்கு மரியாதை செலுத்த வருகை தருகிறார்.

மேலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாய அமைப்புகள் என ஏராளமானோர் வருவார்கள். எனவே போதிய பாதுகாப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக நேரில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா சிறப்பாக நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா கட்டுப்பாடு மற்றும் நிபந்தனைகளுடன் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் போக்குவரத்து வசதிகள் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தார்கள். 

இதையும் படியுங்கள்...நாகை மாவட்ட தொடக்க விழா கண்காட்சியில் ஜெயலலிதா படம் இடம் பெற வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

Tags:    

Similar News