லைஃப்ஸ்டைல்
மாணவர்களின் வாழ்க்கைக்கு கலங்கரை விளக்காக திகழ்பவர்கள் ஆசிரியர்கள்

மாணவர்களின் வாழ்க்கைக்கு கலங்கரை விளக்காக திகழ்பவர்கள் ஆசிரியர்கள்

Published On 2019-09-05 05:46 GMT   |   Update On 2019-09-05 05:46 GMT
ஒவ்வொரு மாணவனுக்கும் தனது வாழ்க்கையில் ஏதோ ஒரு காலகட்டத்தில் அவர்களது ஆசிரியர்களை நினைவு கூறும் சூழ்நிலை உருவாகும்.
ஆசிரியர்கள் மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறார்கள். 1888-ம் ஆண்டு செப்டம்பர் 5-ந்தேதி திருத்தணியில் உள்ள சர்வ பள்ளி என்ற இடத்தில் மகா தத்துவமேதை டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தார். கல்வியின் செல்வரான இவர் நம் நாட்டிலேயே தான் கற்ற தத்துவ சித்தாந்தங்களை கற்பித்து, சிறந்த ஆசிரியராக திகழ்ந்தார்.

இவர் பிறந்த நாளை 1962-ம் ஆண்டு முதல் ஆசிரியர் தினமாக கொண்டாடி மகிழ்கிறோம். எவ்வித உலக அறிவும் இல்லாமல் பள்ளியில் அடியெடுத்து வைக்கும் மாணவர்களுக்கு தனது அனுபவ அறிவால் உலகையே உள்ளங்கையில் அள்ளித்தருபவர்களே ஆசிரியர்கள்.

இன்றைய ஆசிரியர் புதிய விஷயங்களை கற்பதிலும், கற்பித்தலிலும் என்றும் ஆர்வம் உள்ளவர்களாக இருக்க வேண்டுமானால் உலகியல் மற்றும் பொது விஷயங்களை அன்றாடம் கற்பிக்கும் ஒரு மாணவனாக இருக்கவேண்டும்.

‘எழுத்தாணி பிடித்து விரலுக்கு எழுத கற்றுத்தருபவர்” எழுத்துக்களை படிக்கக் கற்றுத்தருபவர் ஆசான். ஆசிரியர் எனும் சிற்பி, கல்வி எனும் உளிகொண்டு, ஒவ்வொரு மாணவனையும் அறிவு, பண்பாடு, ஒழுக்கம், நன்னடத்தை, தர்ம சிந்தனை கொண்ட சிற்பிகளாக வடிவமைக்கிறார். இவர்கள் வெறும் சிற்பங்கள் அல்ல, நல்லாசிரியர்களால் கவனமுடன் உருவாக்கப்பட்ட இந்தியாவின் வெற்றிச் சிப்பாய்கள். வருங்காலத்தில் அனைத்து துறைகளிலும் தன்பாதங்கள் பதித்து, வெற்றிக்கொடியை நடுவார்கள்.

ஒவ்வொரு மாணவனுக்கும் தனது வாழ்க்கையில் ஏதோ ஒரு காலகட்டத்தில் அவர்களது ஆசிரியர்களை நினைவு கூறும் சூழ்நிலை உருவாகும். ஒவ்வொரு மாணவனின் வாழ்க்கைக்கும் ஆசிரியர்களே கலங்கரை விளக்காக திகழ்கின்றனர். பள்ளியின் முதுகெலும்பாக திகழும் ஆசிரியர்கள், மாணவர்களின் ஆறாம் அறிவிற்கு கல்வி புகட்டி, கூர்மை சேர்ப்பவர்கள் நாளைய சமுதாயத்துக்கு நல்லெண்ணம் போதிப்பவர்களான உங்களுக்கு நன்றி கூறி ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் எல்லையற்ற மகிழ்ச்சி.
Tags:    

Similar News