செய்திகள்
ஆசிரியர்கள்

ஆசிரியர்கள் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை

Published On 2019-09-04 04:30 GMT   |   Update On 2019-09-04 04:30 GMT
‘ஆசிரியர்கள் தங்களது அசையும்-அசையா சொத்து விவரங்களை பணி பதிவேட்டில் குறிப்பிடப்பட வேண்டும்’ என்று பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர், அனைத்து முதன்மை, மாவட்ட மற்றும் வட்டார கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசு மற்றும் அரசு உதவி பெறும் 3 ஆயிரத்து 688 உயர்நிலைப்பள்ளிகளில் பணி புரியும் 41 ஆயிரத்து 805 ஆசிரியர்களுக்கும், 4 ஆயிரத்து 40 மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் 1 லட்சத்து 21 ஆயிரத்து 774 ஆசிரியர்களுக்கும் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் ஆதார் எண்ணுடன் இணைந்த தொட்டுணர் கருவி (பயோ- மெட்ரிக்) முறையிலான வருகை பதிவேடு முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அடுத்தகட்டமாக தொடக்கக்கல்வி இயக்குனரின் கட்டுப்பாட்டில் உள்ள பஞ்சாயத்து யூனியன், அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் இந்த பயோ-மெட்ரிக் முறை வருகை பதிவேடு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

பள்ளி கல்வித்துறை நிர்வாக கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு, அரசு உதவி பெறும், நகராட்சி பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு பதவி உயர்வின்போது பணியாளர்களின் முன்னுரிமை மற்றும் தகுதி அடிப்படையில் பரிசீலனை நடக்க வேண்டும். மேலும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் அசையும்-அசையா சொத்து விவரங்கள், பணியாளர்களின் பணி பதிவேட்டில் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.

இதில் ஏதேனும் முரண்பாடுகள் நிகழும் பட்சத்தில் ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறை அறிக்கைப்படி, சம்பந்தப்பட்ட பணியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது. இந்த அறிவுரைகளை தவறாமல் செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News