லைஃப்ஸ்டைல்
வன்முறைக் கலாசாரத்தை தூண்டுகிறதா சினிமா?

வன்முறைக் கலாசாரத்தை தூண்டுகிறதா சினிமா?

Published On 2019-11-09 03:11 GMT   |   Update On 2019-11-09 03:11 GMT
திரைத்துறை படைப்பாளிகளின் படங்களில் இடம் பெறும் வன்முறை காட்சிகள் சமூகத்தில் என்னவிதமான தாக்கத்தை தரும் என்பதற்கு அவர்கள் பொறுப்பேற்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
திரைத்துறை படைப்பாளிகள் தங்கள் படங்களில் அதீதமான வன்முறைக் காட்சிகளை மக்கள் ரசித்து கொண்டாடும் மனநிலையை உருவாக்கி வருகிறார்கள். இந்த வன்முறை காட்சிகள் சமூகத்தில் என்னவிதமான தாக்கத்தை தரும் என்பதற்கு அவர்கள் பொறுப்பேற்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சமீபத்தில் வெளியான அசுரன் மற்றும் பிகில் திரைப்படங்களில் மயிர் கூச்செரியும் அதீத வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இப்படியான படங்களில் சமூக நீதிக் கருத்துகளும், பெண் சமத்துவ சிந்தனைகள் வலியுறுத்தப்பட்டாலும் அதனை ரத்தம் சொட்டச் சொட்டத் தான் சொல்ல வேண்டுமா? என்று சமூக ஆர்வலர்கள், குழந்தைகள் உரிமை பாதுகாவலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்!

ரசிகர்கள் வன்முறை

பிகில் படத்தின் முதல் காட்சியை அதிகாலை ஒரு மணிக்கு திரையிட வேண்டும் என்று கிருஷ்ணகிரியில் ரசிகர்கள் தியேட்டருக்கு அழுத்தம் தந்துள்ளனர். அதையொட்டி தியேட்டரில் 80 ரூபாய் டிக்கெட்டுகளை ரசிகர் மன்றத்தினர் மொத்தமாக வாங்கி ஆயிரம் ரூபாய் வரையில் விற்றுள்ளனர். ஆனால் திடீரென்று அரசு அதிகாலை ஒரு மணி காட்சிக்கு அனுமதி தரமறுத்ததாக செய்தி வரவும், கோபமடைந்த ரசிகர்கள் சாலையில் தீபாவளிக்காக போடப்பட்டிருந்த நடைபாதை வியாபாரிகளின் கடைகளை அடித்து நொறுக்கியதோடு, போலீஸ் சிக்னல்களை நொறுக்கி கடைகளின் பெயர் பலகைகளை பெயர்த்து எடுத்து நடுரோட்டில் போட்டு எரித்துள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த சம்பவத்திற்காக இதுவரை 50 ரசிகர்கள் கைதாகியுள்ளனர்.

ஆக, இப்படிப்பட்ட வன்முறை கலாசாரத்தைத் தான் தற்போதைய திரைப்படங்கள் ரசிகர்களிடம் வளர்க்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.

குழந்தைகளை குற்றவாளியாக்குகிறார்களா?

சமீபத்தில் வெளியான அசுரன் திரைப்படத்தில் ஒரு பதினைந்து வயது சிறுவன் வில்லனை கொல்வதாகவும் அதைத் தொடர்ந்து அவனது தந்தை அந்த சிறுவனை எதிரிகளிடமிருந்து காப்பாற்ற போராடுவது திரைக்கதையாகவும் சொல்லப்பட்டுள்ளது. இது குழந்தைகள் உரிமைக்காக போராடும் அமைப்புகளிடம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. ஏனெனில் தணிக்கை துறையின் விதிமுறைப்படி குழந்தைகள் வன்முறையில் ஈடுபடுவதாகவோ, குற்றவாளிகளாகவோ காட்டக் கூடாது. குழந்தை தன்மைக்கு மாறான வகையில் அவர்களை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது.

இப்படிப்பட்ட வன்முறை காட்சிகள் குழந்தைகளை வன்முறைக்கு தூண்டக்கூடும். வன்முறையில் நாட்டம் கொள்ள செய்யும் என்று மனநல மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும் வருத்தப்படுகிறார்கள்!

சினிமாவின் தாக்கத்தில் நடை, உடை, பாவனைகள்

சினிமா என்பது ஒரு சக்திவாய்ந்த மக்கள் தொடர்பு சாதனம். ஒரு குறிப்பிட்ட உடையை கதாநாயகனோ, நாயகியோ உடுத்திவந்தாலே, அந்த விதமான உடையை மக்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி அணிகிறார்கள். சினிமாவில் பேசப்படும் வசனங்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அடிக்கடி பிரயோகிக் கிறார்கள். நாயகன், நாயகியின் பாவனைகளை அப்படியே பின்பற்றுகிறவர்களும் உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்பு ஜெயப்பிரகாஷ் என்பவன் ஒன்பது கொலைகளை செய்தான். அவனை கைது செய்தபோது தன்னுடைய வாக்குமூலத்தில் “இப்படிப்பட்ட கொலையை செய்ய என்னைத் தூண்டியது இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்து வெளியான ‘நூறாவது நாள்’ படம் தான்” என்றான்.

‘அலைகள் ஓய்வதில்லை’ படம் வந்த பிறகு பள்ளி, கல்லூரி மாணவர்கள் காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்வது அதிகரித்ததாக ஒரு குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது.

பெண்களை துரத்தித் துரத்தி காதலிக்கும் வாலிபர்கள் இறுதியில் அந்த பெண் தன்னை விரும்பாவிட்டால் அவள் மீது ஆசிட் வீசுவதோ அல்லது நடுரோட்டில் கத்தியால் குத்தி கொலை செய்வதோ அவ்வப்போது நடக்கிறது. இதன் பின்னணியில் சினிமாவின் தாக்கம் இருக்கிறது என்ற வலுவான குற்றச்சாட்டு பலராலும் சொல்லப்பட்டது. இதனால் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார், “சமூகநலன் கருதி சினிமா துறையினர் வன்முறையை கூடுமானவரை குறைத்துக் கொள்ளவேண்டும்” என்று அறிக்கைவிட்டார்.

கத்தி, அரிவாள் கலாசாரம்

மதுரை, திருநெல்வேலி சம்பந்தப்பட்ட மக்களின் வாழ்க்கையை சொல்ல வந்த படங்களில் பெருமளவு வன்முறை தூக்கலாக உள்ளது. இதை யாராவது வெளிநாட்டினர் பார்க்க நேரும் போது, தென் தமிழக மக்கள் எப்போதும் கத்தி, அரிவாளோடு ரத்தம் சொட்டச் சொட்ட அலைபவர்கள் என்ற அபிப்பிராயத்திற்கு வருகிறார்கள். வருங்காலத்தில் தமிழகம் பற்றி திரைப்படங்களின் வழியே ஆய்வு செய்பவர்கள் தமிழ் சமூகம் ஒரு கொலைகார சமூகமாகத் தான் இருந்துள்ளது போலும் என்று எண்ணவைத்துவிடக் கூடிய ஆபத்து உள்ளது.

இந்த கத்தி, அரிவாள் கலாசாரம் தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்களையும் தொற்றியுள்ளது. தன் வகுப்பு ஆசிரியை ஒருவரை ஒன்பதாம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது. பஸ், ரெயில்களில் கல்லூரி வரும் மாணவர்களிடம், ‘ரூட் தல’ என்ற கலாசாரம் வளர்ந்துள்ளது. இதில் தகராறு வரும் போது, பட்டாக்கத்திகளுடன் மாணவர்கள் ஒருவரை ஒருவர் விரட்டி வெட்டும் சம்பவங்கள் சினிமாவை ஒப்பிடும் வகையில் நிஜத்தில் நடக்கிறது.

சாதி பெருமை

குறிப்பிட்ட சாதிகளின் பெருமையை வலியுறுத்த அவர்கள் ‘வீரப்பரம்பரை’ என்று காட்டுவதற்காக பல படங்கள் வருகின்றன. ‘இது மூர்க்கமான மனிதர்களின் கதை’ என ஒரு படம் பிரபலப்படுத்தப்பட்டது. ‘தீராப் பகை’, ‘மன்னிக்க முடியாத துரோகம்’ என்பவை திரைப்படங்களின் லாபத்திற்கான பார்முலாவாக மாறியுள்ளதோ என்று எண்ணத்தக்க வகையில் நிறைய படங்கள் வருகின்றன. தியேட்டர்களுக்கு இன்று பெரும்பாலும் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்களே வருகின்றனர். அவர்களை மையப்படுத்தியே படங்கள் வருகின்றன. அதுவும் சமீபத்திய படங்களில் குடிக்கும் காட்சிகள் இல்லாத படங்களை பார்ப்பதே அரிது. அதே சமயம் ஒவ்வொரு படமும் தியேட்டருக்குப் பிறகு தொலைகாட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வீடுகளில் குழந்தைகள் முதல் பெண்கள் என அனைவர் பார்வைக்கும் வந்துவிடுகிறது.

மனநல மருத்துவர் பார்வையில்

டாக்டர் பி.பூர்ணசந்திரிகா (மனநலப் பேராசிரியர்):- திரைப் படங்களின் வன்முறைகள் குழந்தைகளை மிகவும் பாதிக்கவே செய்கின்றன. கொலைகளை, வன்முறைகளை பார்த்துப்பார்த்து பழகும் போது அவர்களின் நுண் உணர்வுத்திறன் குறைகிறது. உணர்வு மரத்துவிடுகிறது. மனிதாபிமானம், இரக்கம் போன்ற உணர்வுகள் மட்டுப்பட்டுவிடுகிறது. பேய் படங்கள் பார்க்கும் குழந்தைகள் இரவில் சாதாரணமாக தெருவில் நடக்கவே அஞ்சுகிறார்கள்!

ஒரு படத்தில் வட மாநிலத்தில் இருந்து ஜமுக்காளம் விற்க வருபவர்கள் வீட்டை நோட்டம் விட்டு திருடுவது போல காட்சி வந்தது. ஒரு படத்தில் குழந்தையை திருடி செல்வது போல காட்சி வந்தது. இதைத் தொடர்ந்து மக்கள் சந்தேகப்பட்டு ஆங்காங்கே சிலரை கும்பலாக கொல்வது நடந்தது. அதாவது சட்டத்தை மதிக்காமல் அவரவரே தீர்ப்பு எழுதும் நிலைமையை சினிமா உருவாக்குகிறது. சினிமா மட்டுமல்ல, டி.வி சீரியல்கள், கார்டூன்கள் என அனைத்துமே இவ்விதம் தான் உள்ளன.

குறிப்பாக ஒரு பெண் விரும்பாவிட்டாலும் அவளை விரட்டி, விரட்டி சென்று காதலித்தால் அவளை காதல்வலையில் வீழ்த்திவிடலாம் என்று திரைப்படங்கள் இளைஞர்களை நம்பவைக்கின்றன. இதற்கு மாறாக, ஒரு பெண், ‘உன்னை விரும்பவில்லை’ எனக் கூறி விட்டால் அதை கண்ணியத்துடன் ஏற்றுக்கொண்டு செல்லும் பக்குவத்தை வளர்க்க வேண்டும்.

இயக்குனர் லெனின்பாரதி:- ஒரு படைப்பு சமூகத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற உணர்வும், புரிதலும் ஒரு படைப்பாளிக்கு மிகவும் முக்கியம். வணிகத்திற்கு வலு சேர்ப்பதற்காக அதீத வன்முறை விலாவாரியாக காட்டப்படுகிறது என்ற குற்றச்சாட்டை மறுப்பதற்கில்லை. அநீதிக்கு எதிரான போராட்ட குணம் என்பது முக்கியம் தான். ஆனால், அதை வன்முறையின் ஊடாகத் தான் சொல்ல முடியும் என்பதில்லை. அன்பு, அக்கறை, கரிசனம், பொறுப்புணர்வு ஆகியவற்றின் ஊடாகவும் சொல்லலாம்! தணிக்கை துறைக்கு சில அழுத்தங்கள், நெருக்கடிகள் தரப்படுகின்றன. அதையும் கடந்து தணிக்கை குழு உறுப்பினர்கள் நியமனம் என்பது கலைஉணர்வு, சமூக அக்கறை ஆகியவற்றைக் கடந்து அரசியல் நியமனங்கள் ஆகிவிட்டதும் ஒரு குறைபாடுதான்!
Tags:    

Similar News