செய்திகள்
கோப்பு படம்

காஞ்சீபுரத்தில் தொடர்ந்து பிளாஸ்டிக் பைகள் விற்ற கடைக்கு ‘சீல்’ வைப்பு

Published On 2020-02-13 09:33 GMT   |   Update On 2020-02-13 09:33 GMT
காஞ்சீபுரத்தில் விதிகளை மீறி தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்து அபராதம் விதித்தனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடைகள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் சில கடைகளில் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் விற்பது நீடிக்கிறது.

இந்த நிலையில் காஞ்சீபுரம் பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி தலைமையில் நகர்நல அலுவலர் முத்து மற்றும் அதிகாரிகள் காஞ்சீபுரம் ரெயில்வே சாலையில் உள்ள வணிக நிறுவனங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, ஒரு கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் இருப்பதை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர். மொத்தம் 300 கிலோ எடை கொண்ட பல்வேறு வகையான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஏற்கனவே மூன்று முறை இந்த கடைக்கு எச்சரிக்கை விடுத்தும் விதிகளை மீறி தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதையடுத்து அந்த கடைக்கு ‘சீல்’ வைக்க நகராட்சி ஆணையர் மகேஸ்வரி உத்தரவிட்டார். மேலும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
Tags:    

Similar News