செய்திகள்
லிட்டன் தாஸ்

பிங்க்-பால் டெஸ்ட்: இரண்டு வீரர்களை ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேற்றிய முகமது ஷமி

Published On 2019-11-22 12:47 GMT   |   Update On 2019-11-22 12:47 GMT
முகமது ஷமியின் பவுன்சர் பந்தில் வங்காளதேசம் அணியைச் சேர்ந்த இரண்டு பேர் காயம் அடைந்து வெளியேறினர்.
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான பிங்க்-பால் டெஸ்ட் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. இரண்டு அணிகளுக்கும் பிங்க்-பால் எப்படி செயலாற்றும் என்பது தெரியாது. இதனால் இரண்டு அணி வீரர்களும் உற்சாகத்துடன் களம் இறங்கினர்.

பந்து வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்க இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ் அபாரமாக பந்து வீசினர். முகமது ஷமி பவுன்சர் பந்தால் வங்காளதேச பேட்ஸ்மேன்களை மிரட்டினார்.

20-வது ஓவரை ஷமி வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை பவுன்சராக வீசினார். பந்து கண்ணிமைக்கும் நேரத்திற்குள் லிட்டன் தாஸின் ஹெல்மெட்டை தாக்கியது. இதனால் லிட்டன் தாஸ் நிலைகுலைந்தார்.

வங்காளதேச அணி மருத்துவர் விரைந்து முதலுதவி அளித்தார். அதனால் தொடர்ந்து பேட்டிங் செய்தார். அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் அடுத்த ஓவரில் இஷாந்த் சர்மா பந்தை சந்திக்கும்போது, 4-வது பந்திற்குப் பிறகு பேட்டிங் செய்ய இயலவில்லை என்று வெளியேறினாார். இதனால் அவருக்குப் பதிலாக மாற்றும் வீரர் மெஹிதி ஹசன் சேர்க்கப்பட்டார்.

அதன்பின் 23-வது ஓவரை ஷமி வீசினார். இந்த ஓவரின் முதல் பந்து அதேபோல் நயீம் ஹசன் ஹெல்மெட்டை தாக்கியது. முதலுவதிக்குப் பிறகு நயீம் ஹசன் தொடர்ந்து பேட்டிங் செய்தார்.



வங்காளதேசம் 106 ரன்னில் ஆல்அவுட் ஆன பின், பீல்டிங் செய்ய வந்தது. அப்போது நயீம் ஹசன் பீல்டிங் செய்ய வரவில்லை.

லிட்டன் தாஸ் மற்றும் நயீம் ஹசன் ஆகியோர் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது.  இருவராலும் விளையாட முடியாது என்று டாக்டர்கள் அறிவித்ததால், கன்குசன் சப்ஸ்டிடியூட் (concussion sub) வீரர்கள் களம் இறக்கப்பட்டனர். நயீம் ஹசன் பந்து வீச்சாளர் என்பதால் தைஜூல் மாற்று வீரராக களம் இறக்கப்பட்டார்.
Tags:    

Similar News