செய்திகள்
கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)

பதிவு செய்ய முடியாதவர்கள் நேரடியாக வந்தாலும் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு- சுகாதாரத்துறை செயலாளர்

Published On 2021-02-28 09:26 GMT   |   Update On 2021-02-28 09:26 GMT
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பும் பயனாளிகள் கோ-வின் 2.0 தளத்திலும், ஆரோக்கிய சேது போன்ற செயலிகள் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம் என சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார்.

சென்னை:

கொரோனா தடுப்பூசி இதுவரை சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் போடப்பட்டு வந்தது.

கடந்த மாதம் 16-ந் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வந்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு நிறைய பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவில்லை. இதுவரை 4.58 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவர்களில் 55 ஆயிரத்து 877 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாளை முதல் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், 45 முதல் 59 வயது வரையிலான நாள்பட்டநோயாளிகள் என 1.6 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.

இந்த தடுப்பூசியை அரசு ஆஸ்பத்திரிகளில் இலவசமாகவும், தனியார் ஆஸ்பத்திரிகளில் கட்டணம் செலுத்தியும் போட்டுக் கொள்ளலாம். இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பும் பயனாளிகள் கோ-வின் 2.0 தளத்திலும், ஆரோக்கிய சேது போன்ற செயலிகள் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.

இதில் தடுப்பூசி போடும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளின் விவரங்கள் முழுமையாக இடம்பெற்றுள்ளது. பயனாளிகள் எங்கு தடுப்பூசியை போட்டுக்கொள்வது என்பதை தீர்மானித்து அதற்கான நேரத்தை பதிவு செய்துகொள்ள முடியும். செயலியில் பதிவு செய்ய முடியாதவர்கள் நேரில் வந்தாலும் அங்கேயே பதிவு செய்து உடனே கொரோனா தடுப்பூசி போடப்படும்.

வேறு நோய் இருப்பவர்கள் மருந்து சீட்டு வைத்து இருந்தால் எங்களிடம் உள்ள டாக்டர்களே மருத்துவ சான்றிதழ் வழங்கி கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்வார்கள்.

தனியார் ஆஸ்பத்திரிகளில் ரூ.250-க்குள் கட்டணம் வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News