ஆன்மிகம்
பொங்கல் திருவிழா

பொங்கல் பண்டிகை: விரதம் இருந்து கொண்டாடும் முறை

Published On 2020-01-14 06:18 GMT   |   Update On 2020-01-14 06:18 GMT
மண்ணையும் அது தரும் வளத்தினையும் கொண்டாடவே உருவானது பொங்கல் திருவிழா. பொங்கல் பண்டிகை அன்று விரதம் இருந்து சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
நீண்ட நெடிய கலாசாரப் பெருமையைக்கொண்ட நம் நாட்டில் கொண்டாடப்படும் ஒவ்வொரு பண்டிகையும் மனிதனின் வாழ்வை மேம்படுத்தவும், உறவுகளைக் கொண்டாடவும் உருவாக்கப்பட்டதே. அந்த வகையில் மண்ணையும் அது தரும் வளத்தினையும் கொண்டாடவே உருவானது பொங்கல் திருவிழா.

பொங்கல் பண்டிகை அன்று விரதம் இருந்து சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். சூரிய பகவானுக்கு படையல் வைத்து வழிபாடு செய்த பின்னர் பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

ஆடிப் பட்டம் தேடி விதைப்பது தமிழர் மரபு. அவை தை மாதம் பிறப்பதற்கு முன் அறுவடையாகிறது. அந்த புத்தரிசியை மண் பானையில் வைத்து (இதற்காகவே புதிய பானை வாங்கப்பட்டு, அதில் திருநீறும் குங்குமமும் இட்டு, அப்பானையை தெய்வீகமாகக் கருதுவது வழக்கம்) சர்க்கரை பொங்கல் செய்வது மரபு. பெரும்பாலும் கிராமப்புறங்களில், வாசலிலே வண்ணக்கோலமிட்டு, அதன் நடுவே பொங்கல் பானையை வைத்து, பானையின் கழுத்தில் மஞ்சள் கிழங்கை இலையோடு கட்டி, மணம் பரப்பும் பொங்கல் சோறு பொங்கியெழும்போது, “பொங்கலோ பொங்கல்’ என்று கூறி மகிழ்வார்கள்.

இப்படி திறந்த வெளியில் பொங்கல் வைப்பதால், சூரிய பகவான் அதை நிவேதனமாக ஏற்று மகிழ்கிறார். இதற்காக கூடவே கரும்பும் வைத்து, கடவுளுக்குப் படைப்பார்கள். நகரங்களில் உள்ளோர், சமையலறையிலேயே பொங்கல் தயார் செய்துவிடுவார்கள். சந்து, பொந்துகளில்கூட வாகன நெரிசல் வளைத்துக் கட்டும்போது, சமையலறை பொங்கலே நகரங்களில் சாத்தியம்.

ஆனால் சாமி கும்பிடுவது வெட்டவெளியில் இருத்தலே நல்லது. பால்கனியிலிருந்தோ, மொட்டை மாடியிலிருந்தோ அந்த பொங்கலை சூரியனுக்கு படைத்து மகிழலாம்; தூபம், தீபம் காட்டி ஆதவனை ஆராதனை செய்யலாம். இங்கும் கட்டாயம் கரும்பு நிவேதனம், முக்கிய இடத்தை பெற்றுள்ளது. கிராமங்களில் தீபாவளிக்கு புத்தாடை வாங்காமல் போனாலும், பொங்கலுக்கு எப்படியும் புதிய ஆடைகளையே அணிவார்கள்.
Tags:    

Similar News