உள்ளூர் செய்திகள்
பட்டுசேலை அணிந்து பொங்கலிட்டு மகிழ்ந்த வடமாநில பெண்கள்.

வடமாநில பெண்களின் பொங்கல் கொண்டாட்டம்

Published On 2022-01-11 07:48 GMT   |   Update On 2022-01-11 07:48 GMT
வடமாநிலங்களில் இருந்து திருப்பூர் வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
திருப்பூர்;

திருப்பூரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் உள்ளன. இதில் தமிழகத்தை சேர்ந்த 5 லட்சம் தொழிலாளர்கள், வடமாநிலங்களை சேர்ந்த 3 லட்சம் ஆண், பெண் தொழிலாளர்கள் என 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.  

தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, தங்கும் வசதிகளை பனியன் நிறுவனங்களே ஏற்படுத்தி கொடுக்கின்றன. எனவே வடமாநிலங்களில் இருந்து திருப்பூர் வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

மேலும் வடமாநில தொழிலாளர்கள் பலர் தங்களது குடும்பத்துடன் திருப்பூரிலேயே தங்கி பணியாற்றி வருகின்றனர். பெரும்பாலான தொழி லாளர்கள் திருப்பூரிலேயே சொந்தமாக வீடுகள் வாங்கி குடியேறியும் வருகின்றனர். இதனால் அவர்கள் தமிழகத்தில் நடைபெறும் அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடுகின்றனர்.

தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பொங்கல் கொண்டாட்டங்கள் களைக் கட்டி வருகின்றன. படியூர் அருகே உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றும் வடமாநிலத்தை சேர்ந்த இளம்பெண்கள் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில் பெண்கள் பட்டு சேலை அணிந்து பங்கேற்றதுடன், பொங்கலிடும் பகுதியை சுத்தம் செய்து, சாணம் தெளித்து, விதவிதமான வண்ண கோலங்களை போட்டனர்.  

மேலும் கரும்புகள், காய்கறிகள் படைத்து புத்தம் புது பானைகளில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். பானையில் மஞ்சள் குலைகளை கட்டி வைத்திருந்தனர். தமிழ் கலாச்சாரத்தின்படி அவர்கள் பொங்கல் வழிபாடு நடத்தினர்.

பானையில் பொங்கல் பொங்கியபோது இந்தியும், தமிழும் கலந்த மொழியில் பொங்கலோ... பொங்கல்... என்று குலவையிட்டனர். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
Tags:    

Similar News