செய்திகள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அருகே நிறுத்தப்பட்டுள்ள வஜ்ரா வாகனம்

ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட்டுக்கு அனுமதி- தூத்துக்குடியில் 2-வது நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்பு

Published On 2021-04-27 09:14 GMT   |   Update On 2021-04-27 09:14 GMT
தூத்துக்குடியில் இன்று 2-வது நாளாக நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவின்குமார் அபிநபு, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
தூத்துக்குடி:

கொரோனா பரவல் காரணமாக ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ள நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரித்து வழங்க அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தது.

இந்த மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என மத்திய அரசு பதில் கூறியது. மேலும் ஆலையை திறப்பது தொடர்பாக தமிழக அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதற்கிடையே தூத்துக்குடியில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. அதில் பெரும்பாலானோர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என கூறினர்.

இந்நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சியினர் கூறினர்.

இதையடுத்து ஆக்சிஜன் தயாரிப்பதற்காக 4 மாதங்களுக்கு மட்டும் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. எனினும் இந்த முடிவுக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து தூத்துக்குடியில் இன்று 2-வது நாளாக நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவின்குமார் அபிநபு, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

கலெக்டர் அலுவலகத்தை சுற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் அலுவலகத்தின் பிரதான வாசலை தவிர மற்ற அனைத்து வாசல்களும் மூடப்பட்டு உள்ளது. கலெக்டர் அலுவலகம், ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, வஜ்ரா வாகனம், தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனம், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் ராஜாஜி பார்க், குமரெட்டியாபுரம், பண்டாரம்பட்டி, தெற்கு வீரபாண்டியாபுரம் என முக்கிய பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.



Tags:    

Similar News