செய்திகள்
கோப்புபடம்

ரஷியாவில் முதல் முறையாக மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் பரவியது

Published On 2021-02-21 08:42 GMT   |   Update On 2021-02-21 08:42 GMT
ரஷியாவில் பறவைகளிடம் இருந்து முதல் முறையாக மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் பரவியுள்ளதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்தனர்.

மாஸ்கோ:

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவி பெரும் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. சுமார் 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பரவியது.

பெரும்பாலான நாடுகளில் இன்னும் கொரோனா கட்டுக்குள் வராத நிலையில் அடுத்த புதிய பிரச்சினையாக பறவை காய்ச்சல் உருவெடுத்துள்ளது.

பறவை காய்ச்சல் முதன் முறையாக மனிதர்களுக்கு பரவி இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. ரஷியாவின் தெற்கு பகுதியில் உள்ள கோழி பண்ணையில் பணியாற்றும் 7 தொழிலாளர்களுக்கு ‘எச்5 என்8’ என்ற புதிய வகை பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் பரவியுள்ளதை உறுதி செய்யப்படுவது இதுவே முதல்முறை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ரஷியாவின் சுகாதார கண்காணிப்பு குழு தலைவர் அன்னை போபோவா கூறும்போது, ‘‘கோழிப்பண்ணையில் பணியாற்றிய 7 தொழிலாளர்களிடம் இருந்துது சேகரிக்கப்பட்ட மரபணுக்களை ஆய்வு செய்ததில் பறவை காய்ச்சல் பரவி இருப்பது தெரியவந்தது.

ஆனால் அவர்கள் அனைவருக்கும் எந்த கடுமையான பாதிப்பும் ஏற்படவில்லை. உலகில் முதன்முறையாக பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவியது தொடர்பாக உலக சுகாதார அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

‘‘இந்த வைரஸ் மேலும் பிறழ்வடைய முடியுமா என்பதை காலம்தான் சொல்லும். மனிதரிடம் இருந்து மனிதனுக்கு பரவும் திறனை இன்னும் இந்த வைரஸ் பெறாதபோது இந்த கண்டுபிடிப்பு அனைவருக்கும், உலகம் முழுவதுக்கும் அதனை தடுக்க தயாராவதற்கும், போதுமான மற்றும் சரியான நேரத்தில் செயல்படுவதற்கும் நேரத்தை தருகிறது’’ என்றார்.

பறவை காய்ச்சல் வைரஸ்களில் வெவ்வேறு வகைகள் உள்ளன. இதில் மிகவும் தொற்று நோயான ‘எச்5 என்8’ பறவைகளுக்கு ஆபத்தானது. இதற்கு முன்பு இந்த பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவியதாக அறிவிக்கப்படவில்லை. தற்போது ரஷியாவில் மனிதர்களுக்கு பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறும்போது, பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவியது தொடர்பாக மேலும் தகவல்களை சேகரிப்பதற்கும் பொது சுகாதாரத்துறை மதிப்பிடுவதற்கும ரஷிய நாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருகிறோம்’’ என்று கூறி உள்ளார்.

Tags:    

Similar News