இந்தியா
சித்தராமையா

காங்கிரசின் பாதயாத்திரையால் பா.ஜனதாவுக்கு பயம் வந்துவிட்டது: சித்தராமையா

Published On 2022-01-12 04:02 GMT   |   Update On 2022-01-12 04:02 GMT
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. நாங்கள் பாதயாத்திரை நடத்துவதால் தான் வைரஸ் பரவல் அதிகரித்துவிட்டதாக கூறுவது தவறு என்று சித்தராமையா கூறியுள்ளார்.
ராமநகர் :

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ராமநகர் மாவட்டம் கனகபுராவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:

மேகதாது திட்டத்தை உடனடியாக தொடங்க வலியுறுத்தி காங்கிரஸ் பாதயாத்திரை தொடங்கியுள்ளது. முதல் நாளில் நான் பங்கேற்றேன். அதன் பிறகு எனக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து நான் பெங்களூருவுக்கு திரும்பி ஓய்வு எடுத்தேன். காய்ச்சல் சரியாகிவிட்டதால் நான் மீண்டும் இன்று (நேற்று) பாதயாத்திரையில் கலந்து கொள்கிறேன்.கடந்த 2 நாட்களாக பாதயாத்திரை சிறப்பான முறையில் நடைபெற்று உள்ளது. இதற்காக டி.கே.சிவக்குமார் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இன்று (நேற்று) பாதயாத்திரையில் மைசூரு மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். அடுத்து வரும் நாட்களில் ஹாசன், மண்டியா, சிக்பள்ளாப்பூர், துமகூரு, பெங்களூரு, கோலார் என்று அனைத்து மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்துகொள்ள உள்ளனர். பாதயாத்திரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மேகதாது திட்டம் காங்கிரஸ் அரசின் திட்டம் ஆகும். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தோம். நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் தவறான தகவல்களை வெளியிட்டு வருகிறார். கடந்த 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்றது. அப்போது மேகதாது திட்டத்தை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எங்கள் ஆட்சியில் திட்ட மதிப்பு ரூ.5,912 கோடியாக இருந்தது. அதன் பிறகு அதன் மதிப்பீடு உயர்ந்ததால் கடந்த 2019-ம் ஆண்டு திட்ட மதிப்பீடு ரூ.9,500 கோடியாக உயர்ந்தது. இவ்வளவு விஷயங்களை செய்தபோதும், காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியில் காலதாமதம் செய்ததாக இந்த அரசு சொல்கிறது. தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை தேசிய பசுமை தீர்ப்பாயம் ரத்து செய்தது.

இப்போது மேகதாது திட்டத்திற்கு எந்த தடையும் இல்லை. இந்த திட்ட பணிகளை பா.ஜனதா அரசு தொடங்க வேண்டியது தானே. அதனால் தான் பணிகளை தொடங்க வலியுறுத்தி நாங்கள் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளோம். 30 பேர் மீது இந்த அரசு வழக்கு போட்டுள்ளது. வழக்குகளை போட்டு எங்களை அச்சுறுத்திவிடலாம் என்று இந்த அரசு கருதுகிறது. இது மிகப்பெரிய முட்டாள்தனம். பா.ஜனதாவினர் விதிமுறைகளை மீறி கூட்டங்களை நடத்தியுள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா?.

பாதயாத்திரையில் மக்கள் தாமாக முன்வந்து கலந்து கலந்து கொள்கிறார்கள். இதை கண்டு பா.ஜனதாவுக்கு பயம் வந்துவிட்டது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. நாங்கள் பாதயாத்திரை நடத்துவதால் தான் வைரஸ் பரவல் அதிகரித்துவிட்டதாக கூறுவது தவறு.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Tags:    

Similar News