செய்திகள்
புரசைவாக்கம் அருள்மிகு கங்காதேஸ்வரர் கோவிலில் திருக்குளத்தை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

4 மாவட்டங்களில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் தொடங்க அனுமதி- அமைச்சர் தகவல்

Published On 2021-10-07 09:09 GMT   |   Update On 2021-10-07 10:34 GMT
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தொடங்கப்படும் கல்லூரிகளில் ஆன்மீகம் சார்ந்த பாடம் நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை:

சென்னை புரசைவாக்கம் கங்காதேஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார். கோவில் திருக்குளம், நந்தவனம், கோவில் வாகனம், அன்னதான கூடம், திருத்தேர் உள்ளிட்ட கோவிலுக்கு சொந்தமான இடங்களை ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 5 கல்லூரிகள் இயங்கி வருகிறது. புதிதாக 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டபேரவையில் அறிவித்துள்ளோம். இதில் 4 கல்லூரிக்கு உயர் கல்வி துறையிடம் அனுமதி பெற்றுள்ளோம். கல்லூரிகளை இந்த ஆண்டு திறக்க உள்ளோம்.

சென்னை கொளத்தூர் எவர் எக்ஸல் பிளாக்கில் ஸ்ரீ கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பரமத்திவேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அர்த்தநாரீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம் அம்பளிக்கை என்ற தனியார் இடத்தில் பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி, தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்ற பெயரில் புதிய கல்லூரிகள் தொடங்கப்படுகிறது.

இக்கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவான பி.காம்., பி.சி.ஏ., பி.பி.ஏ., பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆகிய 4 பாடப்பிரிவுகள் இடம்பெறவுள்ளன. அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளுடன் வகுப்பறைகள், மாணவ, மாணவியரின் ஆய்வக அறைகள், அடிப்படை வசதிகள், நூலகம், கணினி ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.

தனியார் கட்டிடத்தில் அனுமதி பெற்று வாடகையில் கல்லூரியை நடத்த உள்ளோம். சென்னையில் 2 இடங்களில் கல்லூரி தொடங்கப்படும் என அறிவித்துள்ளோம். சென்னை கொளத்தூரில் கல்லூரி தொடங்க பூம்புகார் நகரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தொடங்கப்படும் கல்லூரிகளில் ஆன்மீகம் சார்ந்த பாடமும் நடத்தப்படும். சென்னையில் இருக்கின்ற தனியார் கல்லூரிக்கு போட்டிபோடும் விதத்தில் இந்த கல்லூரிகள் நடைபெறும்.


திருக்கோவில்களில் புரோக்கர்கள் மூலம் பணம் வசூலிக்கும் முறையை ஒழித்து முறைப்படுத்தப்படும். கோவில்களுக்கு பக்தர்கள் நன்கொடை அளிக்க இணையதளம் தொடங்கப்படும். திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோவிலில் செவ்வாய்கிழமை பக்தர்கள் அதிக அளவில் வருவதால், பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் கலந்து ஆலோசனை செய்து செவ்வாய்கிழமை கோவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News