செய்திகள்
கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய போது எடுத்த படம்.

நாகர்கோவிலில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-11-18 14:47 GMT   |   Update On 2020-11-18 14:47 GMT
ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தி நாகர்கோவிலில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்:

குமரி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். கோர்ட்டு வழிகாட்டுதலின்படி கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் மாதம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

கலெக்டர் தலைமையிலான கண்காணிப்பு குழு கூட்டம் மாதம் ஒருமுறை நடத்த வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் அம்மா சிமெண்ட் வினியோகத்தை முறைபடுத்துதல் அவசியம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் செல்லப்பன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. பெல்லார்மின், சி.ஐ.டியு. மாவட்ட செயலாளர் தங்கமோகன், மாவட்ட தலைவர் சிங்காரன், அந்தோணி, லட்சுமணன், சந்திரபோஷ், ரசல் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர். ஆர்ப்பாட்டம் காரணமாக கலெக்டர் அலுவலகம் முன் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் கலெக்டர் அலுவலக பகுதி பரபரப்பாக காட்சி அளித்தது.
Tags:    

Similar News