செய்திகள்
புஜித் ஜெயசுன்டேரா - ஹேமாசிறி பெர்னான்டோ

இலங்கை பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர், முன்னாள் காவல்துறை தலைவர் திடீர் கைது

Published On 2019-07-02 13:33 GMT   |   Update On 2019-07-02 13:33 GMT
ஈஸ்டர் குண்டுவெடிப்பு தாக்குதலை தடுக்க தவறிய இலங்கை பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் மற்றும் முன்னாள் காவல்துறை தலைவரை சி.ஐ.டி. அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.
கொழும்பு:

இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதி ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனையின்போது 3 தேவாலயங்கள், 4 ஓட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்பு பகுதியில் அடுத்தடுத்து 8 இடங்களில் குண்டுகள் வெடித்தன.

இந்த தாக்குதல்களில் இந்தியர்கள் உள்பட 258 பேர் உயிரிழந்தனர். 400-க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு காரணமான தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 பயங்கரவாத இயக்கங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்தது.

கொழும்புவில் இதுபோன்ற தாக்குதல் நடக்கலாம் என இந்தியா முன்கூட்டியே உளவுத்தகவல் அளித்திருந்தும் இந்த தாக்குதலை தடுக்கும் வகையில் செயலாற்ற தவறிய பாதுகாப்புத்துறை செயலாளர் ஹேமாசிறி பெர்னான்டோ, காவல்துறை தலைவர் புஜித் ஜெயசுன்டேரா உள்பட பல அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக பெண்கள் உள்பட சுமார் 100 பேர் கைது செய்து விசாரணை காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். விசா காலம் முடிந்தும் இலங்கையில் தங்கி இருந்த சுமார் 200 இஸ்லாமிய போதகர்கள் உள்பட 600 வெளிநாட்டினர் வெளியேற்றப்பட்டனர்.



இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி விஜித் மலால்கோடா தலைமையில் முன்னாள் போலீஸ் ஐ.ஜி. என்.கே.இலங்கக்கூன், சட்டம்-ஒழுங்கு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜெயமன்னே ஆகியோரை கொண்ட சிறப்பு குழுவை  அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா அமைத்துள்ளார்.

இந்த குழுவினர் விரிவான விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் பங்கேற்க வருமாறு  காவல்துறை தலைவர் புஜித் ஜெயசுன்டேராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால், உடல்நிலை சரியில்லை என்று கூறி போலீஸ் மருத்துவமனையில் அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். இன்று அந்த மருத்துவமனைக்கு சென்ற சி.ஐ.டி. அதிகாரிகள் அவரிடம் சிறிது நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்தனர்.

இதேபோல் கொழும்புவில் உள்ள தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாதுகாப்புத்துறை செயலாளர் ஹேமாசிறி பெர்னான்டோவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, மனிதநேயத்துக்கு எதிரான கொடுங்குற்றத்தில் ஈடுபட்ட இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கான அடிப்படை முகாந்திரங்கள் இருப்பதாக அரசுதரப்பு தலைமை வழக்கறிஞர் டப்புலா டி லிவேரா குற்றம்சாட்டி இருந்த நிலையில் இந்த கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News