செய்திகள்
ராமதாஸ்

ஈரப்பத உச்சவரம்பு இல்லாமல் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் - ராமதாஸ் அறிக்கை

Published On 2021-02-22 09:29 GMT   |   Update On 2021-02-22 09:29 GMT
மழையில் நனைந்து சேதமடைந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பிப்ரவரி மாதத்தின் இறுதியில் விழுப்புரம், கடலூர் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் பெய்த மழை அனைத்துத் தரப்பினருக்கும், குறிப்பாக உழவர்களுக்கு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. உழவர்கள் அரும்பாடுபட்டு அறுவடை செய்து வைத்திருந்த நெல் மூட்டைகள் எதிர்பாராத மழையில் சிக்கி சேதமடைந்திருக்கின்றன.

எவரும் எதிர்பாராத வகையில் சனிக்கிழமை மாலை முதல் பெய்த மழையால், கடலூர் மாவட்டமும் புதுச்சேரியும் தான் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், பண்ருட்டி, ஸ்ரீமுஷ்ணம், வானமா தேவி, சிறுபாக்கம், கூடலையாத்தூர், எசனூர், குணமங்கலம், டி.ஆதிவராகநல்லூர் உள்ளிட்ட இடங்களில் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்காக அடுக்கி வைக்கப்பட்டு இருந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழை நீரில் மூழ்கி விட்டன.

தமிழ்நாட்டில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீத ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படும். ஆனாலும் உழவர்களின் நலன் கருதி இப்போது 20 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

இதை மேலும் தளர்த்தி, ஈரப்பத உச்சவரம்பின்றி நெல் கொள்முதல் செய்யப்பட்டால் உழவர்களுக்கு ஏற்படும் இழப்பை ஓரளவு குறைக்க முடியும்.

எனவே, தமிழக அரசு உடனடியாக மத்திய அரசை தொடர்பு கொண்டு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பத உச்சவரம்பின்றி நெல்லை கொள்முதல் செய்ய சிறப்பு அனுமதி பெற வேண்டும்.

அதன்படி மழையில் நனைந்து சேதமடைந்த நெல் மூட்டைகளை கொள் முதல் செய்து பாதிக்கப் பட்ட உழவர்களின் நலன் களை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News