செய்திகள்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

அரசு முறை பயணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கை சென்றார்

Published On 2021-02-23 19:15 GMT   |   Update On 2021-02-23 19:15 GMT
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசு முறை பயணமாக நேற்று இலங்கைக்கு சென்றார்.
கொழும்பு:

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசு முறை பயணமாக நேற்று இலங்கைக்கு சென்றார். அவருடன் அவரின் மந்திரிசபை சகாக்கள், தொழிலதிபர்கள் மற்றும் அரசின் உயர்மட்ட பிரதிநிதிகள் பலர் வந்துள்ளனர்.

இந்தப் பயணத்தின் போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரைச் நேரில் சந்தித்து, வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், கல்வி, வேளாண்மை, தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் சுற்றுலா ஆகியவற்றில் இருநாடுகளின் ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்.‌

அதோடு இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கூட்டு வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டிலும் பிரதமர் இம்ரான்கான் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.‌

மேலும் இந்த பயணத்தின் போது இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.‌

பாகிஸ்தான் பிரதமராக கடந்த 2018-ம் ஆண்டு பதவி ஏற்ற பிறகு இம்ரான்கான் முதல் முறையாக இலங்கை வந்துள்ளார்.

கடைசியாக அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தபோது கடந்த 1986-ம் ஆண்டில் கிரிக்கெட் போட்டிக்காக இலங்கை வந்தார். அதன்பிறகு தற்போதுதான் அவர் இலங்கை வந்துள்ளார்.

இலங்கை பயணத்தின்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று (புதன்கிழமை) அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக இலங்கை அரசு கடந்த வாரம் அறிவித்தது.

ஆனால் பிரதமர் இம்ரான் கான் தனது உரையின் போது காஷ்மீர் விவகாரம் குறித்து பிரச்சினை எழுப்ப வாய்ப்பு உள்ளதால் அவரது உரை ரத்து செய்யப்பட்டதாக இலங்கை ஊடகங்களில் செய்தி வெளியாகின.
Tags:    

Similar News