செய்திகள்

அரசின் முன் எச்சரிக்கை நடவடிக்கையால் கஜா புயலின் போது உயிர் சேதம் குறைவு- முதல்வர் பழனிசாமி தகவல்

Published On 2019-01-05 09:37 GMT   |   Update On 2019-01-05 10:10 GMT
கஜா புயல் தாக்குதலில் முன் எச்சரிக்கை நடவடிக்கையால் உயிர் சேதம் பெருமளவில் தடுக்கப்பட்டதாக சட்டசபையில் முதலமைச்ச் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #TNAssembly #GajaCyclone #EdappadiPalaniswami
சென்னை:

சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கஜா புயல் தாக்குவதற்கு முன்பாக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பேசியதாவது:-

கஜா புயலால் பாதிக்கப்பட்ட போது எந்த அதிகாரியும் அந்தப் பகுதியிலே வரவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டை ஒரு உறுப்பினர் இங்கே பதிவு செய்துள்ளார். அது தவறானது. வருவாய்த்துறை அமைச்சர் சொன்னதைப்போல, கஜா புயல் வருவதற்கு முன்பாகவே, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்த கருத்தின் அடிப்படையிலே, என் தலைமையிலே இருமுறை கூட்டம் கூட்டப்பட்டு, அந்தக் கூட்டத்திலே மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் எல்லாம் கலந்து கொண்டு, புயல் ஏற்பட்டால் நாம் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை எல்லாம் ஆலோசித்து, அந்த ஆலோசனையின்படி அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், புயலால் பாதிக்கப்படக்கூடிய அந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு எல்லாம் அறிவுறுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், வருவாய்த் துறை அமைச்சர் சொன்னதைப் போல, புயல் ஏற்படக்கூடிய அந்த மாவட்டங்களிலே, அந்த மாவட்ட அமைச்சர்கள் அங்கேயே தங்கியிருந்து, அந்தப் புயல் வருகின்ற போது, மக்கள் எந்தவிதத்திலும் பாதிக்கக்கூடாது அதற்கு முன் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

அவர்களுக்கு துணையாக மூத்த இந்திய ஆட்சிப் பணியாளர்களும் முன் கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டனர். முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்ட காரணத்தினாலே, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த காரணத்தினாலே, அனைத்து மின் இணைப்புகளும் புயல் அடிப்பதற்கு முன்பாக 6 மணிக்கு 
மணிக்கே நிறுத்தப்பட்டு விட்டன
.

போக்குவரத்து இயக்கம் எல்லாம் நிறுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல், இந்த புயல் கடுமையாக பாதிக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்த கருத்தின் அடிப்படையிலே, குடிசையில் வாழ்ந்த மக்கள், தாழ்வான பகுதியிலே வாழ்ந்த மக்களை எல்லாம், அதிகாரிகள் தான் அழைத்து வந்து பாதுகாப்பான முகாம்களில் தங்க வைத்திருக்கிறார்கள்.

கோப்புப்படம்

கிட்டத்தட்ட 81, 948 நபர்கள் 471 முகாம்களிலே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்க வைத்ததன் காரணமாக உயிர் சேதம் பெருமளவு தடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, அதிகாரிகள் எல்லாம் வந்த காரணத்தினாலே தான் இந்த நடவடிக்கைகள் எல்லாம் எடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆகவே, கஜா புயல் ஏற்பட்ட போது யாரும் வரவில்லை என்ற உறுப்பினரின் குற்றச்சாட்டு தவறு. வருவதற்கு முன்பாகவே, அங்கே இருக்கின்ற மாவட்ட அமைச்சர்கள், மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், மின்சாரத் துறை அதிகாரிகள், வேளாண் துறை அதிகாரிகள் இன்னும் பல்வேறு துறை சேர்ந்த அதிகாரிகள் எல்லாம் அங்கே அனுப்பி வைக்கப்பட்டு, புயல் ஏற்படுவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு, மக்களை காப்பாற்ற வேண்டுமென்ற அடிப்படையிலே, அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். #TNAssembly #GajaCyclone #EdappadiPalaniswami
Tags:    

Similar News