செய்திகள்
தாஜ்மகால்

கொரோனா பரவல் எதிரொலி - வரலாற்று நினைவகங்களை மே 15 வரை மூட முடிவு

Published On 2021-04-15 19:00 GMT   |   Update On 2021-04-15 19:00 GMT
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் புதிய அலை தீவிரமடைந்து உள்ளது. நாள்தோறும் பாதிப்படைவோரின் எண்ணிக்கை 1 லட்சம் என்ற அளவை கடந்து வருகிறது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை கடந்த வாரம் 10 லட்சம் பதிவான நிலையில், நேற்று மட்டும் 2 லட்சம் என்ற எண்ணிக்கையை ஒரே நாளில் கடந்து அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,40,74,564 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,038 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,73,123 ஆக உயர்ந்துள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதித்த நாடுகளின் வரிசையில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா இடம் பெற்றுள்ளது.



இந்நிலையில், இந்திய கலாசார மற்றும் சுற்றுலா அமைச்சக இணை மந்திரி பிரகலாத் சிங் பட்டேல் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா பெருந்தொற்றின் நடப்பு சூழ்நிலையை முன்னிட்டு மத்திய கலாசார அமைச்சகம் மற்றும் இந்திய தொல்லியல் துறை ஆகியவை தங்களால் பாதுகாக்கப்பட்டு வரும் அனைத்து நினைவகங்களையும் வரும்  மே 15-ம் தேதி வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை மூடுவது என முடிவு செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச்சிலும் இதுபோன்ற சூழலில் இதேபோன்ற முடிவு எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பரில், தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கியதும், இந்திய தொல்லியல் துறை பார்வையாளர்களின் எண்ணிக்கை வரம்பில் தளர்வு ஏற்படுத்தியது. இதனால் அவர்களது வருகை அதிகரித்தது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வரும் சூழலில் மீண்டும் அவற்றை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News