செய்திகள்
ஏபிஜே அப்துல் கலாம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல் கலாமுக்கு சிலை- சட்டசபையில் அமைச்சர் சாமிநாதன் தகவல்

Published On 2021-09-07 10:09 GMT   |   Update On 2021-09-07 10:46 GMT
நோபல் பரிசு பெற்றவரும், தேசிய கீதத்தை இயற்றியவருமான வங்கக்கவி ரவீந்திரநாத் தாகூருக்கு சென்னை ராணி மேரி கல்லூரியில் சிலை அமைக்கப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

சட்டசபையில் இன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சாமிநாதன் அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

நாட்டின் விடுதலைக்காக போராடிய தியாகிகள், இலக்கிய படைப்பாளிகள், சமூக நீதிக்காக போராடியவர்கள், முன்னாள் குடியரசு தலைவர், திராவிட இயக்க முன்னோடிகள் ஆகியோரை போற்றும் வகையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் திருவுருவச்சிலைகள் நிறுவப்படும்.

சிவகங்கை சீமையை ஆண்ட மருது சகோதரர்களுக்கு சென்னை கிண்டி, காந்தி மண்டபம் வளாகத்தில் திருவுருவச் சிலை அமைக்கப்படும். சுதந்திர போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மையாருக்கு கடலூரிலும், மொழிப்போர் தியாகி கீழபழுவூர் சின்னசாமிக்கு அரியலூர் மாவட்டம் கீழபழுவூரிலும் சிலை அமைக்கப்படும்.

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானியாகவும், இளைஞர் மற்றும் மாணவர்களின் எழுச்சி நாயகனாகவும் திகழ்ந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் திருவுருவச் சிலை அமைக்கப்படும்.

நோபல் பரிசு பெற்றவரும், தேசிய கீதத்தை இயற்றியவருமான வங்கக்கவி ரவீந்திரநாத் தாகூருக்கு சென்னை ராணி மேரி கல்லூரியில் சிலை அமைக்கப்படும்.

திராவிட இயக்கத்தின் முன்னோடியும், தலைசிறந்த இலக்கியவாதியும், முன்னாள் நிதியமைச்சருமான மறைந்த நாவலர் நெடுஞ்செழியனுக்கு சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் திருவுருவச் சிலை அமைக்கப்படும்.


திராவிட இயக்கத்தின் அரசியல் முன்னோடி, சமூக சீர்திருத்தவாதி மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கு மயிலாடுதுறையிலும், சமூக சீர்திருத்த பெண் மருத்துவர் முத்துலட்சுமிக்கு புதுக்கோட்டையிலும் திருவுருவச் சிலை அமைக்கப்படும்.

மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணை வேந்தராக பணியாற்றிய பன்முக ஆற்றல் கொண்ட தமிழறிஞர் மு.வரதராசனாருக்கு ராணிப்பேட்டையில் சிலை அமைக்கப்படும்.

மேற்கண்ட தலைவர்களுக்கு திருவுருவச் சிலைகள் நிறுவ ரூ.1 கோடி நிதியுதவி ஒதுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News